'புத்தக பூங்கொத்து' திட்டம் புத்துயிர் பெறுமா?: கல்வியாளர்கள் எதிர்பார்ப்புமாணவர்கள் மத்தியில் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த, கடந்த 2009-10 கல்வியாண்டில், திமுக ஆட்சியில், 'புத்தக பூங்கொத்து' திட்டம் கொண்டு வரப்பட்டது. அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், மத்திய, மாநில அரசுகள் பங்களிப்போடு, அனைத்து அரசு, அரசு உதவிபெறும், தொடக்க, நடுநிலை வகுப்புகளுக்கு வழவழப்பான தாளில், வண்ணமயமான படங்களுடன் கூடிய புத்தகங்கள் அச்சிடப்பட்டு பள்ளிகளுக்கு வினியோகிக்கப்பட்டன.இதில், கணித புதிர்கள், அறிவியல் கருத்துகள், சமூக நீதி கதைகள், வார்த்தை விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒரு வகுப்புக்கு 30 புத்தகங்கள் வழங்கப்பட்டன. இப்புத்தகங்களை, வகுப்பறையில் படிக்க வைப்பதோடு போட்டிகள் நடத்தி, வாசிப்பு பழக்கத்தை கொண்டுவர வழிவகை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது

செயல்வழி கற்றல் முறையில், பாடத்திட்டங்கள் விளக்க, புத்தக பூங்கொத்து திட்டம் பெரிதும் பயனுள்ளதாக இருந்ததாக, ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தனர். பின், 2011ம் ஆண்டு முதல், அதிமுக ஆட்சி தொடர்வதால், இத்திட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி நகராமல் முடங்கியது. கடந்த 9 ஆண்டுகளாக பள்ளிகளில் உள்ள நூலகங்களை மேம்படுத்த அரசு எவ்வித நிதியும் ஒதுக்கப்படவில்லை. திருவள்ளூர் உட்பட பல மாவட்டங்களில் 80 சதவீத உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் நூலக பராமரிப்பாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதால், பள்ளிகளில் உள்ள நூலகங்கள் பெரும்பாலும் பூட்டியே வைத்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த, புத்தக பூங்கொத்து திட்டம் பெரிதும் பயனுள்ளதாக இருந்தது. இதை முடக்கிய பின், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், அவ்வப்போது பள்ளிகளுக்கு வழங்கப்படும் புத்தகங்கள், மாணவர்களின் அறிவு தேடலுக்கு ஏற்ப இல்லை. இதனால், தொடக்க வகுப்பு மாணவர்கள், பாடத்திட்டம் அல்லாத பிற நூல்கள் வாசிக்க ஆர்வம் காட்டுவதில்லை. எனவே, புத்தக பூங்கொத்து திட்டத்தை மீண்டும் புத்துயிர் பெற செய்வதோடு, தொடக்க, நடுநிலை பள்ளிகளில், மாணவர்கள் அமர்ந்து படிக்கும் வகையில் நூலக வசதி ஏற்படுத்தி தர வேண்டும்' என்றார்.