அரசின் இலவச நோட்டு, புத்தகங்களை பள்ளிகளுக்கு சொந்த செலவில் எடுத்துச்செல்ல அதிகாரிகள் உத்தரவு: தலைமை ஆசிரியர்கள் அதிருப்தி


சேலம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இலவச நோட்டு மற்றும் புத்தகங்களை தலைமை ஆசிரியர்கள் சொந்த செலவில் எடுத்துச் செல்லும்படி வட்டார கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளதால் அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள், நோட்டுகள், ஸ்கூல்பேக், சீருடை என 16 வகையான இலவச பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இவற்றில் இலவச புத்தகங்கள், கடந்த சில ஆண்டுகளாக பள்ளி திறக்கும் நாளன்றே மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி நடப்பாண்டு, பள்ளி திறக்கும் ஜூன் 3ம் தேதியன்று, இலவச புத்தகங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, மாவட்ட குடோன்களில் இருந்து பள்ளிகளுக்கு அவற்றை அனுப்பி வைக்கும் பணி நேற்று தொடங்கியது.


இவற்றில், பள்ளிக்கல்வித்துறையின் கீழ் வரும் 6 முதல் 12ம் வகுப்பிற்கு மாவட்ட கல்வி அலுவலகம் மூலமாகவும், தொடக்கக் கல்வித்துறையின் கீழ் வரும் 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான இலவச நோட்டு, புத்தகங்கள் அந்தந்த வட்டார கல்வி அலுவலர்கள் (பிஇஓ) மூலமாகவும் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, தலைமை ஆசிரியர்களே நேரடியாக சென்று, இலவச நோட்டு, புத்தகங்களை எடுத்து வரும் நிலை காணப்பட்டது
. இதனால் கூடுதல் செலவும், அலைச்சலும் ஏற்பட்டதையடுத்து, பள்ளிகளுக்கு கொண்டு செல்லும் பொறுப்பு பிஇஓ வசம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கென பயணச்செலவிற்கும் நிதி ஒதுக்கப்பட்டது.


இந்நிலையில் சேலம் மாவட்டத்தின் ஒருசில ஒன்றியங்களில் தலைமை ஆசிரியர்கள் தங்களது சொந்த செலவில் இலவச நோட்டு புத்தகங்களை எடுத்துச்செல்ல பிஇஓக்கள் நிர்பந்திப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து தலைமை ஆசிரியர்கள் கூறுகையில், ‘‘ஒரு வட்டார கல்வி அலுவலகத்தின் கீழ் குறைந்தபட்சம் 60 பள்ளிகள் உள்ளன.
அப்பள்ளிக்கு வட்டார கல்வி அலுவலகத்திலிருந்து இலவச நோட்டு புத்தகங்களை கொண்டு சேர்க்க தலா ரூ.16 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இதனை வைத்து 4 பயண வழித்தடங்கள் அமைத்து, பள்ளிக்கு நோட்டு புத்தகங்களை கொண்டு வர வேண்டும்.
ஆனால், சேலம் மாவட்டத்தின் ஒருசில பிஇஓக்கள், தலைமை ஆசிரியர்களே தங்கள் பள்ளிக்கான புத்தகங்களை பெற்றுச் செல்ல அறிவுறுத்துகின்றனர். ஒருசிலர், பள்ளிக்கு தலா ரூ.300 பயணத்தொகை வழங்குவதாக கூறுகின்றனர். இதனால், கூடுதல் செலவும், தேவையற்ற அலைச்சலும் ஏற்படுகிறது.
எனவே, அரசு உத்தரவிட்டபடி, பிஇஓக்களே புத்தகங்களை பள்ளிக்கு கொண்டுவந்து சேர்க்க வேண்டும்,’’ என்றனர்.

தினகரன் செய்தி