Title of the document

தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. ஆகிய மழலையர் வகுப்புகளில் குழந்தைகளைச் சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டினாலும், ஆசிரியர்களை நியமிப்பதில் ஏற்படும் சிக்கலால் வகுப்புகள் நடப்பது கேள்விக்குறியாகியுள்ளது.

அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க, அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்பு தொடங்கும் திட்டம் கல்வியாண்டு 2018-19-இல் செயல்படுத்தப்பட்டது. ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும், வளாகத்துக்குள் செயல்படும் அங்கன்வாடி மையங்களைக்கொண்ட 30 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன. இந்தப் பள்ளிகளில் உள்ள மையங்களில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டன.
இதில், 3 வயதுக்குள்பட்ட குழந்தைகளை புதிதாக சேர்ப்பதற்கும், சேர்க்கை விளம்பரங்கள் வைக்கப்பட்டு, சேர்க்கையும் நடத்தப்பட்டது. அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தொடங்கியதால் பெற்றோரும், ஆர்வத்தோடு குழந்தைகளைச் சேர்த்தனர்.

பணியிட மாற்றத்தில் சிக்கல்: மழலையர் வகுப்புகளை நடத்துவதற்கென அரசு பள்ளிகளில் உபரியாக இருந்த ஆசிரியர்களுக்கு மழலையர் பள்ளி ஆசிரியர்களாக பணியாற்ற ஆணை வழங்கப்பட்டது. ஆசிரியர்கள், பணியிடம் மாறுவதில் சிக்கல் ஏற்பட்டதால், வகுப்புகள் நடப்பதும் தடைபட்டு மையங்களில் வழக்கம்போல குழந்தைகளை பராமரிக்கும் பணிகள் மட்டுமே தொடர்ந்தன. பெற்றோரும் ஏமாற்றமடைந்தனர்.

இந்தநிலையில் வரும் 2019-20-ஆம் கல்வியாண்டிலும் மழலையர் வகுப்புகளுக்கு குழந்தைகளைச் சேர்க்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பள்ளிகளுக்கு கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியது. இதன்படி, ஏப்ரல் மாதம் முழுவதும் சேர்க்கை நடைபெற்றது. மேலும், வரும் கல்வியாண்டில் மழலையர் வகுப்புகளில் விளையாட குழந்தைகளுக்கான விளையாட்டு பொருள்களும், அந்தந்த வட்டார குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகங்களுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பினும், ஆசிரியர்கள் இல்லாமல் மழலையர் வகுப்புகள் நடப்பது கேள்விக்குறியாகவே உள்ளது

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post