Title of the document

உடனடியாக 3 சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவிக்கக் கோரி அரசு ஊழியர் சங்கம் சார்பில் நாளை தமிழகம் முழுவதும் ஆயிரம் இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் மு.சுப்பிரமணியன், பொதுச்செயலாளர் மு.அன்பரசு ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மத்திய அரசு, அதன் ஊழியர்களுக்கு 1.1.2019 முதல் மூன்று சதவீத அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்து அதன் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களும், தமிழக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட உயர் அலுவலர்களும் 1.1.2019 முதல் நிலுவைத்தொகையை பெற்றுவிட்டனர். பொதுவாக அகவிலைப் படியை மத்திய அரசு, அதன் ஊழியர்களுக்கு அறிவித்த வுடன் அதைத்தொடர்ந்து 15 நாட்களுக்குள் தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படையை அறிவிப்பது தமிழக அரசின் நடைமுறை வழக்கமாகும்
ஆனால் இந்த முறை மத்திய அரசு ஊழியர்களுக்கு பிப்ரவரி மாதத்தில் அறிவிக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வு தமிழக அரசு ஊழியர்களுக்கு மார்ச் இறுதியிலாவது வந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அகவிலைப்படி உயர்வுக்கான அரசாணை இன்னும் வெளியிடப்படவில்லை. தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கிய நடைமுறைகள் ஏற்கனவே இங்குள்ளது. அதனால் தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதை இவ்வரசாங்கம் காரணமாகச் சொல்லி அகவிலைப்படி நிலுவையை தராமல் இருக்க வாய்ப்பில்லை.

ஏற்கனவே ஊதிய மாற்ற முரண்பாடுகளினாலும், ஊதியமற்ற நிலுவைத் தொகை இழப்பினாலும், மேலும் ஒன்பது அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி வேலை நிறுத்த போராட்டம் நடத்தி அதன் காரணமாக ஏற்பட்ட சம்பள இழப்பின் காரணமாகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கும் அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களுக்கு முறையாக இவ்வரசாங்கம் கொடுக்க வேண்டிய அகவிலைப்படி உயர்வினை வழங்காமல் இழுத்தடிக்கும் போக்கானது ஜனநாயக முறைப்படி செயலாற்றும் அரசாங்கம் செய்யக்கூடிய காரியமல்ல.
எனவே அரசு ஊழியர்கள் -ஆசிரியர்களுக்கு அவர்கள் கேட்காமலேயே வழங்க வேண்டிய மூன்று சதவீத அகவிலைப்படி உயர்வு நிலுவையை 1.1.2019 முதல் உடனடியாக வழங்கிட அரசாணை வெளியிட வேண்டும். ஜனவரி 2019 முதல் ஏப்ரல் 2019 வரையிலான நான்கு மாத கால அகவிலைப்படி உயர்வு நிலுவைத்தொகையை தமிழக அரசு ஊழியர்கள் ரொக்கமாக பெற்றுக்கொள்ளவும் உத்தரவிட வேண்டும்.

இதை உடனடியாக அறிவிக்காத நிலையில் அரசு ஊழியர் சங்கம் நாளை (10-ந்தேதி) தமிழக அரசின் வஞ்சகப் போக்கை கண்டித்தும், உடனடியாக 3 சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவிக்கக் கோரியும் தமிழகம் முழுவதும் ஆயிரம் இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post