தெரு விளக்கில் படித்து சிபிஎஸ்இ தேர்வில் 95% மதிப்பெண் - அசத்திய சலவை தொழிலாளியின் மகள்!


சலவை தொழிலாளியின் மகள் தெரு விளக்கு வெளிச்சத்தில் படித்து சிபிஎஸ்இ தேர்வில் 95% மதிப்பெண் எடுத்து சாதித்துள்ளார்.18 வயதான நிதி கண்ணுஜியா சமீபத்தில் வெளியான சிபிஎஸ்இ தேர்வில் 95% மதிப்பெண் எடுத்துள்ளார். அவர் வசிக்கும் பகுதியில் மின்சார வசதி இல்லாத நிலையில் தெரு விளக்கு வெளிச்சத்திலும், பேட்டரி மூலம் இயங்கும் சிறிய லைட் வெளிச்சத்திலும் படித்து இந்த சாதனையை நிதி கண்ணுஜியா படைத்துள்ளார். மிகச்சிறிய வீட்டில் ஓரத்தில் அமர்ந்துக்கொண்டு பேட்டரி லைட்டுகள் மூலம் கண்ணுஜியா படிப்பதைஅவரின் குடும்பத்தினர் நெகிழ்ச்சியாக நினைவு கூறுகிறார்கள்.


இது குறித்து 'தி பெட்டர் இந்தியா' செய்தி இணையப்பக்கத்துக்குபேசியநிதி கண்ணுஜியா, ''தேர்வுக்கு முதல் நாள் தெரு விளக்கு வெளிச்சத்தில் தான் படிப்பேன்.எனக்கு இரண்டு சகோதரிகள். அவர்கள் படிப்பில் சுட்டிகள். ஆனால் அவர்களுக்கு 9ம் வகுப்பு படிக்கும் போதே திருமணம் செய்து வைக்கப்பட்டது. இது எனக்கு பயத்தை உண்டாக்கியது. குழந்தை திருமணம் அவர்களது வாழ்க்கையை எப்படி மாற்றியது என்பது எனக்கு தெரியும். அது தான் என்னை படிக்கச்சொல்லி தூண்டியது. ஆங்கில வழிக்கல்வி எனக்கு ஆரம்பத்தில் பயத்தை காட்டியது.
வசதியானவர்கள் படிக்கும் பள்ளி எனக்கு ஒரு வித பய உணர்வை தந்தது. அந்த சூழலுக்கு நான் பொருந்த சற்று தடுமாறினேன். உதவித்தொகை கிடைத்ததால் என்னால் படிப்பை தொடர முடிந்தது. எனது ஆங்கில அறிவும் அவ்வளவு சரளமாக இல்லை. ஆனால் ஆசிரியர்களாலும், நண்பர்களாலும் நான் முன்னேறினேன்'' என்று தெரிவித்துள்ளார்.


சலவை தொழிலாளர்களான கண்ணுஜியாவின் பெற்றோர்கள் உத்திரப்பிரதேசத்தின் பரபங்கியை நகரின் அருகேயுள்ள குக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள். கண்ணுஜியாவை இரண்டு மாத குழந்தையாக தூக்கிக்கொண்டு வேலை தேடி லக்னோவிற்கு வந்துள்ளனர். பெண்களுக்கு படிப்பு தேவையற்ற ஒன்று என்ற எண்ணம் கொண்ட என் பெற்றோர் தற்போது மாறிவிட்டனர். கண்ணுஜியாவை அவர் ஆசைக்கு ஏற்ப படிக்க வைப்போம் என்றும் தெரிவிக்கின்றனர்.
டெல்லி பல்கலைக்கழகத்தில் வரலாறு படிக்கப்போவதாக தெரிவிக்கும் கண்ணுஜியா ஐஏஎஸ் ஆகவேண்டுமென்பதே தன்னுடைய கனவு என்கிறார். கண்ணுஜியாவுக்குள் ஒரு தாகம் இருக்கிறது அது அவரை வெற்றியை நோக்கி அழைத்துச்செல்லும் என்று உச்சி முகர்கிறார்கள் கண்ணுஜியாவின் குடும்பத்தினர்.