ஜூன் 6ல் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் படிக்க விண்ணப்பிக்கலாம்: அதிகாரிகள் தகவல்

KALVI NEWS
ஜூன் 6ம் தேதி எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் படிக்க விண்ணப்பிக்கலாம் என மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 21 அரசு மருத்துவ கல்லூரிகள், 10 தனியார் மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை மருத்துவம், முதுநிலை மருத்துவ டிப்ளமோ படிப்புகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வந்தது
. இந்தநிலையில், 2019-20ம் கல்வியாண்டில் முதுநிலை டிப்ளமோ படிப்புகளை முதுநிலை மருத்துவ படிப்புகளாக மாற்றி அங்கிகரித்து இந்திய மருத்துவ கவுன்சில் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, இனிவரும் ஆண்டுகளில் முதுநிலை மருத்துவ படிப்புகளே தொடரும்.


இந்தநிலையில், இந்த ஆண்டு தமிழகத்தில் சென்னை மருத்துவ கல்லூரி, ஸ்டான்லி மருத்துவ கல்லூரிகளில் மொத்தம் 150 இடங்கள் கூடுதலாக மாணவர் சேர்க்கை நடத்திகொள்ள இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கியது. இதனிடையே இந்த ஆண்டு ஏப்ரல் மாத இறுதியில் முதுநிலை மருத்துவ கலந்தாய்வு நடத்தப்பட்டது.
நீட் மதிப்பெண் அடிப்படையிலான இந்த கலந்தாய்வில் 1,578 பேருக்கு தேர்ச்சி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், ஜூன் 6ம் தேதி மருத்துவ கலந்தாய்விற்கான இணையதளத்தில் விண்ணப்பிக்கும் பணிகளை தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


இதுதொடர்பாக மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியதாவது:முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்விற்கு முன்னர் 150 இடங்களுக்கான சேர்க்கை ஆணை வழங்கப்பட்டது.
தற்போது கூடுதலாக 150 இடங்கள் கோரி விண்ணப்பித்திருந்தோம். அதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தையடுத்து இந்த ஆண்டு கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக இடங்கள் கிடைக்கும் பட்சத்தில் அடுத்த ஆண்டு முதலே அந்த இடங்களுக்கு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடத்துவோம்.
இதேபோல், ஜூன் 6ம் தேதி மருத்துவ கலந்தாய்விற்கான இணையதளத்தில் விண்ணப்பிக்கும் பணிகளை தொடங்க உள்ளோம். இவ்வாறு கூறினர்.