தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஆர்டிஇ இடங்களுக்கு கூடுதலாக விண்ணப்பங்கள் வந்திருந்தால் குலுக்கல் முறையில் இடங்கள் ஒதுக்கப்படும்

கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்கீழ் (ஆர்டிஇ) தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளுக்கு ஒதுக்க வேண்டும்.

 இதில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில்  இலவசமாக சேரும் மாணவர்கள் 8ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்த தேவையில்லை.

 தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் பள்ளிகளில் 1 லட்சத்துக்கும் அதிகமான இடங்கள் ஆர்டிஇ பிரிவில் உள்ளன.

இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கான இணையதளம் மூலம் விண்ணப்பித்தல் ஏப்ரல் 22ம் தேதி  தொடங்கி மே 18ம் தேதி முடிந்தது. கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின்கீழ் ஒரு லட்சத்து 20   ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

 ஆர்டிஇ இடங்களுக்கான மாணவர் சேர்க்கையில் தனியார் பள்ளிகள் முறைகேடு செய்வதாக குற்றச்சாட்டு  எழுந்தது.

அதனால் புகார்களை தவிர்க்க ஆர்டிஇ கோட்டாவின்கீழ் உள்ள 25 சதவீத இடங்களுக்கு மாணவர் சேர்க்கையை இந்தாண்டு முதல் இணையதளம் வழியாக நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது. விண்ணப்பங்கள் சரிபார்க்கும் பணியை மே  28ம் தேதியுடன் அதிகாரிகள் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

 அதன்பின் 25 சதவீத இடங்களுக்கு இலவச மாணவர் சேர்க்கைக்கு மே 29, 30ம் தேதிகளில் இணையதளம் மூலம் இடம் ஒதுக்கீடு செய்யப்படும்.

 மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம்  சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளின் மேற்பார்வையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.

 பள்ளிகளில் உள்ள இடங்களின் எண்ணிக்கைக்கு குறைவாக விண்ணப்பங்கள் வந்திருக்கும்பட்சத்தில், விண்ணப்பித்த அனைவருக்கும்  இணையதளம் மூலம் இடம் ஒதுக்கீடு செய்யப்படும்.

 25 சதவீதத்துக்கு கூடுதலாக விண்ணப்பங்கள் வந்திருந்தால் குலுக்கல் முறையில் இடங்கள் ஒதுக்கப்பட உள்ளது