Title of the document

எத்தனை பேருக்கு தபால் ஓட்டுகளுக்கான படிவம் வழங்கப்பட்டது என, விரிவான அறிக்கை அளிக்க தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் சாந்தகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:

''தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் பணியில் 6 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். தேர்தலை நியாமாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும். ஒரு வாக்காளரின் வாக்கு கூட விடுபட்டு விடக்கூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் விதிகள் உள்ள நிலையில், தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தபால் ஓட்டு மூலம் வாக்களிக்க விண்ணப்பப் படிவம் 12, 12ஏ முறையாக வழங்கப்படவில்லை. சிறு காரணங்களுக்காகக் கூட தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

அரசுப் பணியாளர்களான காவல் துறையைச் சேர்ந்தவர்கள் 90 ஆயிரத்து 2 தபால் வாக்குகள் முழுமையாக பதிவான தகவலை வெளியிட்டுள்ள தேர்தல் ஆணையம் அரசு ஆசிரியரகள் மற்றும் ஆசிரியர்களின் தபால் வாக்கு குறித்த தகவல்களை வெளியிடவில்லை.

ஆங்கில செய்தித்தாள் ஒன்றில் 1 லட்சம் அரசு ஊழியர்கள் வாக்களிக்கவில்லை என செய்தி வெளியாகியுள்ளது. இதன் மூலம் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்பட்டுள்ளது தெரியவருகிறது. எனவே, தேர்தல் பணிகளில் ஈடுபட்டு தபால் வாக்களிக்கத் தவறிய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தபால் ஓட்டுக்கான விண்ணப்பப் படிவங்களை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வழங்க வேண்டும்''.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வாக்குகளை வாக்கு எண்ணிக்கையில் சேர்க்கவும் அம்மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள் தமிழக அரசுக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்ற எண்ணத்தில் இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதற்கு தேர்தல் ஆணையம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஒவ்வொரு வாக்காளனின் வாக்கும் முக்கியமானது என்று தெரிவித்தனர். மேலும், மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எத்தனை தபால் ஓட்டுகளுக்கான விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டன, எத்தனை தபால் ஓட்டுகள் பதிவாகின உள்ளிட்ட விவரங்களை நாளை மறுநாள் அறிக்கையாகத் தாக்கல் செய்ய (மே 17) தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post