அரசு ஊழியர்-ஆசிரியர்களின் 12,915 தபால் வாக்குகள் நிராகரிப்பு: உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்

Join Our KalviNews Telegram Group - Click Here
9080019831 - Add This Number In Your Whatsapp Groups - 9080019831விண்ணப்ப படிவங்களை முறையாக பூர்த்தி செய்யாத 12 ஆயிரத்து 915 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் தபால் வாக்குகள் மட்டுமே நிராகரிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற பொது தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் பணியில்  ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டவர்களில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோரின் தபால் வாக்குக்கான விண்ணப்ப படிவங்கள் நிராகரிக்கப்பட்டதாக வெளியான செய்தியின் அடிப்படையில அரசு பள்ளி ஆசிரியர் சாந்தகுமார் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

அவரது மனுவில்,  அரசு பணியாளர்களான காவல் துறையை சேர்ந்தவர்கள் 90 ஆயிரத்து 2 தபால் வாக்குகள் முழுமையாக பதிவான தகவலை வெளியிட்டுள்ள தேர்தல் ஆணையம், அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் தபால் வாக்கு குறித்த தகவல்களை வெளியிடவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அதனால், தேர்தல் பணிகளில் ஈடுபட்டு தபால் வாக்களிக்க தவறிய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தபால் ஓட்டுக்கான விண்ணப்ப படிவங்களை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வழங்கி, அவர்களின் வாக்குகளை பெற்று மே-19 வாக்கு எண்ணிக்கையில் சேர்க்க வேண்டும் எனவும் அவர் தனது மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை  நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது, அப்போது இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அந்த பதில் மனுவில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும்  காவல்துறையினர் என 4 லட்சத்து 35 ஆயிரம் 3 பேருக்கு தபால் வாக்குகளுக்கான படிவங்கள் வழங்கப்பட்டதாகவும், அவற்றில் 4 லட்சத்து 10 ஆயிரத்து 200 பேர் மட்டுமே பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட படிவங்களில் 3 லட்சத்து 97 ஆயிரத்து 391 பேரின் வாக்குகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், தொகுதி, பாகம் எண், வரிசை எண், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை சரியாக குறிப்பிடாத மற்றும் தேர்தல் ஆணைய டேட்டாபேஸுடன் பொருந்தாத 12 ஆயிரத்து 915 பேரின் விண்ணப்பங்கள் மட்டுமே தபால் வாக்குகள்  நிராகரிக்கப்பட்டது என்றும்,  ஒன்றரை லட்சம் வாக்குகள் மொத்தமாக விடுபட்டது என்பது தவறான குற்றச்சாட்டு எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்த நீதிபதிகள், தபால் வாக்குகள் தொடர்பான அனைத்து விவரங்களையும் 2 நாட்களில் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர்.

 தபால் ஓட்டுக்கள் பதிவில் இதுபோன்ற விடுபடுதல்களோ, குழப்பங்களோ நடைபெறாத வகையில் தேர்தல் ஆணையம் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தி, ஆசிரியர் சாந்தகுமாரின் மனுவை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.

Post a Comment

0 Comments