கோவையில், பணிபுரியும் அரசுப் பள்ளியில் மகள்களை சேர்த்த ஆசிரியை


"அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்பதில்லை. தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர். ஆனால், மற்ற குழந்தைகள் அரசுப் பள்ளியில் சேர வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். அவர்களுக்கே அரசுப் பள்ளியின் மீது நம்பிக்கையில்லையா?". பொதுவாக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு இது.

 நடுத்தர குடும்பமாக இருந் தாலும் கவுரவத்துகாக கடன் வாங்கியாவது தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை படிக்க வைக்கும் பெற்றோர்களுக்கு மத்தியில் தான் ஆசிரியராக உள்ள பள்ளியிலேயே தனது மகள்களை சேர்த்துள்ளார் கோவை மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வரும் லதா.

தனது மகள்கள் பிரித்திகாஸ்ரீயை (6) 1-ம் வகுப்பிலும், யத்திகாஸ்ரீயை (11) 6-ம் வகுப்பிலும் நடப்பாண்டு சேர்த்துள்ளார். "தனியார் பள்ளிகளுக்கு இணையாக எங்கள் பள்ளியிலேயே வசதிகள் உள்ளன. தன்னார்வர்கள் பலர் எங்கள் பள்ளிக்கு உதவி வருகின்றனர். நான் எந்த அரசுப் பள்ளியில் பணிபுரிகிறேனோ அந்த பள்ளியில்தான் எனது இளைய மகளை படிக்க வைக்க வேண்டும் என்று 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு செய்திருந்தேன்.

அதன்படியே நடப்பாண்டு சேர்த்துள்ளேன்" என்கிறார் லதா. ஆசிரியர்கள் பலர் தனியார் பள்ளிகளை நாடுவது குறித்து கேட்டதற்கு, "அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லை என்ற காரணம்தான் தனியார் பள்ளியை நோக்கி அவர்களை நகர்த்துகிறது.

நான் அரசுப் பள்ளியில் மகள்களை சேர்ப்பதை பார்த்து, சக ஆசிரியர் ஒருவரும் தனது குழந்தையை அரசுப் பள்ளியில் சேர்க்க முடிவெடுத்துள்ளார். மற்ற பள்ளி ஆசிரியர்களும் இனிவரும் காலங்களில் மாறுவார்கள் என்று நம்புகிறேன். எந்த பள்ளியில் படித்தாலும் குழந்தைகளை திறமையானவர்களாக மாற்ற முடியும். அது ஆசிரியர்களின் கைகளில்தான் உள்ளது. என் குழந்தைகள் என்னிடம் படிப்பதை நான் பெருமையாகவே கருதுகிறேன்" என்றார்.