தேர்தல் திருவிழா எப்படி இருக்கிறது; செய்துள்ள ஏற்பாடுகள் என்ன?தேர்தல் திருவிழாவுக்கு, தமிழகம் எப்போதோ தயாராகி விட்டது. தேர்தலுக்கு தேவையான, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், வேட்பாளர் விபரங்கள் ஒட்டப்பட்டு, தயார் நிலையில் உள்ளன. இவை, ஓட்டுப்பதிவுக்கு முதல் நாள், உரிய பாதுகாப்புடன், ஓட்டுச்சாவடிக்கு எடுத்து செல்லப்படும்.தேர்தல் பணியில், 3.50 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். நேரடியாக தேர்தல் பணியில், 35 ஆயிரம் போலீசார் ஈடுபடுகின்றனர்.மேலும், 30 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். அவர்களுடன், முன்னாள் ராணுவ வீரர்கள், ஓய்வு பெற்ற போலீசார், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், ஊர்க் காவல் படையினரும், பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், திடீரென மக்கர் ஏற்படுவதாக புகார் வருகிறதே...ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் திடீரென பழுது ஏற்பட வாய்ப்பில்லை; எதிர்பாராத விதமாக எங்காவது இதுபோன்ற பிரச்னை வந்தால், தீர்வு காண வசதியாக, சட்டசபை தொகுதிக்கு இருவர் என, 'பெல்' நிறுவன பொறியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், உடனடியாக அங்கு சென்று, சரி செய்வர்.தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள், எந்த வகையில் உள்ளன?அனைத்து விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பணப் பட்டுவாடாவை தடுக்கவும், உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படாமலிருக்க, உரிய நடவடிக்கை எடுக்கும்படி, போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.பதற்றமான பகுதிகள் கண்டறியப்பட்டு, அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் அமைதியாக வந்து ஓட்டு போட, அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.வாக்காளர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?வாக்காளர்கள், தங்களுடைய புகைப்படத்துடன் கூடிய, வாக்காளர் அடையாள அட்டையை, தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். 'பூத் சிலிப்' வைத்து ஓட்டுப் போட முடியாது.புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை இல்லையெனில், ஆதார் அட்டை உள்ளிட்ட, 11 ஆவணங்களை பயன்படுத்தியும் ஓட்டளிக்கலாம்.ஓட்டுப்போட செல்லும்போது, பூத் சிலிப் மற்றும் அடையாள அட்டையை எடுத்து செல்ல வேண்டும்.ஓட்டுச்சாவடி விபரத்தை அறிய, '1950' எண்ணிற்கு அழைத்து தெரிந்து கொள்ளலாம். அனைவரும் ஓட்டுச்சாவடிக்கு சென்று ஓட்டளித்து, 100 சதவீதம் ஓட்டளிப்பை எட்ட உதவ வேண்டும்.முதல் முறையாக, தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்து, பொதுத் தேர்தலை நடத்துகிறீர்கள். இந்த அனுபவம் எப்படி உள்ளது?மிகவும் பொறுப்பு மிகுந்த பணி. ஏராளமானோரை ஒருங்கிணைக்க வேண்டி உள்ளது. சிறு தவறும் நடந்து விடக்கூடாது என்ற விழிப்புணர்வுடன் இருக்கிறோம். மாவட்ட கலெக்டர்கள், எஸ்.பி.,க்கள், வருமான வரித் துறை அதிகாரிகள், பெல் நிறுவன பணியாளர்கள் என, அனைவரையும் ஒருங்கிணைத்து பணியாற்றுகிறோம்.
ஓட்டுச்சாவடிகளில் அடிப்படை வசதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வசதிகள் உள்ளிட்ட, அனைத்து பணிகளையும், ஆறு மாதங்களாக செய்து வருகிறோம். தேர்தலை வெற்றிகரமாக முடிக்க, அனைத்து துறையினரும் ஒத்துழைப்பு தருகின்றனர்.அரசியல் கட்சியினரால், பிரச்னை எழுந்ததா; எப்படி சமாளிக்கிறீர்கள்?அரசியல் கட்சியினர் அவ்வப்போது புகார் தருகின்றனர். அவற்றின் மீது, உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். அரசியல் கட்சிகளால், பெரிதாக எந்த பிரச்னையும் ஏற்படவில்லை.அவர்கள், சில நேரங்களில், போனில் பேசுவர்; 'வாட்ஸ் ஆப்'பில் தகவல் கொடுப்பர். நேரில் சந்தித்து மனு கொடுப்பர். அவற்றின் மீது, உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கிறோம். அரசியல் கட்சிகளும், போதிய ஒத்துழைப்பு தருகின்றன.வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டு விட்டது என, ஓட்டுச்சாவடிகளில் பிரச்னை எழும்; இந்த முறையும் அப்படி நடக்குமா?வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதாக, இம்முறை அதிக அளவில் புகார் வரவில்லை. ஏனெனில், அதிக அளவில் சிறப்பு முகாம்கள் நடத்தி உள்ளோம்.எனினும், சிலர் கடைசி நேரத்தில், பெயர் உள்ளதா என்று பார்த்துவிட்டு, பெயர் இல்லை என்று கூறக்கூடும். அது, மிகவும் குறைவாக இருக்கும். வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே, ஓட்டளிக்க முடியும்.ஓட்டுப்பதிவு எப்படி இருக்கும்; அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளதா?இந்த முறை, '100 சதவீத ஓட்டுப்பதிவு' என்பதை குறிக்கோளாக வைத்து, நிறைய விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டுள்ளோம். ஓட்டுப்பதிவு குறைவாக உள்ள இடங்களைக் கண்டறிந்து, ஓட்டுப்பதிவை அதிகரிக்க, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளோம்.நடிகர், நடிகையர் மற்றும் பிரபலங்கள் வாயிலாக, வீடியோக்கள் தயாரித்து வெளியிட்டு உள்ளோம். சென்னையில் ஓட்டுப்பதிவை அதிகரிக்க, அதிக விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு உள்ளோம். தேர்தலில் ஓட்டளிக்க, மக்களும் ஆர்வமாக உள்ளனர்.எனவே, முன்பை விட, ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரிக்கும் என, நம்புகிறோம். பொதுவாக சட்டசபை தேர்தலில் ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகமாகவும், லோக்சபா தேர்தலில் குறைவாகவும் இருக்கும். இம்முறை அந்த நிலை மாறும்
Post a Comment