வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் இருப்பதைப்போல இடையிலேயே உயிரிழந்தாலும் குடும்ப ஓய்வூதியம்:அமைப்புசாரா தொழிலாளர்கள் கோரிக்கை


வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் இருப்பதைப்போல இடையிலேயே உயிரிழந்தாலும் குடும்ப ஓய்வூதியம்:அமைப்புசாரா தொழிலாளர்கள் கோரிக்கை
மத்திய அரசு அறிமுகப்படுத்தி யுள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மாதாந்திர ஓய்வூதிய திட்டத்தில், உறுப்பினர் இடையில் இறக்க நேரிட்டால், வருங்கால வைப்பு நிதித் திட்டத்தில் வழங்குவது போன்று அவரது குடும்பத்துக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.பிரதம மந்திரியின் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மாதாந்திர ஓய்வூதிய திட்டம் கடந்த மாதம் தொடங்கப்பட்டது. இதில் ரிக் ஷா, ஆட்டோ ஓட்டுநர்கள், தெரு வியாபாரிகள், விவசாயம், கட்டுமானம், வீட்டுவேலை, செருப்புத் தொழில் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபடுபவர்கள் இணையலாம். வயது 18 முதல் 40-க்குள்ளும் மாத வருமானம் ரூ.15 ஆயிரத்துக்குள்ளும் இருக்க வேண்டும். வருங்கால வைப்பு நிதி, தேசிய ஓய்வூதிய திட்டம், தொழிலாளர் காப்பீட்டுத் திட்டம் ஆகியவற்றில் உறுப்பினராகவும் வருமான வரி செலுத்துபவராகவும் இருத்தல் கூடாது. இத்திட்டத்தில் சேரும் தொழிலாளி இடையில் இறந்தாலோ அல்லது நிரந்தர ஊனமாகி விட்டாலோ அவரது மனைவிக்கு ஓய்வூதியம் கிடைக்காது.

இந்நிலையில், வருங்கால வைப்பு நிதிதிட்டத்தில் சேரும் உறுப்பினர்கள் இடையில் இறந்தால் வழங்கப்படுவதுபோல இத்திட்டப் பயனாளிகளுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து, அமைப்புசாரா தொழிலாளர்கள் நல சங்கத்தின் நிர்வாகிகள் கூறியதாவது:ஒரு தொழிலாளி தனது 60 வயது வரை இத்திட்டத்தில் பணம்செலுத்தினால்தான் ஓய்வூதியம்வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் ரூ.3 ஆயிரம்என்பது குறைந்த தொகையாகும். 30, 40 வருடங்கள் கழித்து, அன்றைய விலைவாசிக்கு இத்தொகை மிகச் சிறியதாக இருக்கும்.


எனவே, இத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். மேலும், இத்திட்டத்தில் உறுப்பினராகச் சேரும் தொழிலாளி இடையில் இறந்தாலோ அல்லது நிரந்தர ஊனம் அடைந்து அவர் வருவாய் ஈட்டும் நிலையை இழந்தாலோ அவரது மனைவி இத்திட்டத்தை தொடரலாம். ஆனால், அவரும் தனது கணவரின் 60 வயது வரை கட்ட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மனைவியால் அந்தத் திட்டத்தில் தொடர முடியவில்லை எனில் ஓய்வூதியம் கிடைக்காது. வருங்கால வைப்பு நிதி வழங்கப்படுவதுபோல, இந்த திட்டத்திலும் உறுப்பினர் மரணம் அடைந்தால் அவர் கட்டிய பணம் திருப்பி தருவதோடு, அவரது குடும்பத்துக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்.


60 வயதைக் கடந்து ஓய்வூதியம் பெறும் சமயத்தில் தொழிலாளி உயிரிழந்தால், ரூ.3 ஆயிரத்தில் பாதி தொகை மனைவிக்கு வழங்கப்படும். குறைகளை களைய வேண்டும் இதை வைத்து எப்படி குடும்பம்நடத்த முடியும். மேலும் உறுப்பினர் மற்றும் அவரது மனைவி இருவரும் 60 வயதுக்கு முன்பாக இறந்து விட்டால் அவர்கள் கட்டிய பணம் அரசு நிதியில் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அவர்களது குடும்பம் நிர்கதியாகிவிடும். இத்தகைய குறைகளை சரிசெய்துவிட்டு இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.