அரசு ஊழியர்கள் பூத் ஏஜென்டாக பணியாற்றினால் சிறை தண்டனை விதிக்கப்படுமென தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அதன்படி தேர்தல் பூத் ஏஜென்ட் பணிகள் குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:
1. வாக்கு போட ஆரம்பிக்கும் முன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்குகள் எதுவும் இல்லையென உறுதிப்படுத்த வேண்டும்.
2. மூன்று முறையாவது டம்மியாக வாக்களித்து வாக்குகள் சரியான நபருக்கு விழுகிறதா என சரிபார்க்க வேண்டும்.
3. சரியான வாக்காளர் தான் வாக்களிக்கிறாரா என்பதை கண்காணிக்க வேண்டும்.
4. தவறான நபர் வாக்களிக்க வந்தால் அவரை தடுத்து நிறுத்த வேண்டும்.
5. வாக்களிப்பு முடிந்ததும் முறையாக சீல் வைக்கப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
6. வாக்குப்பதிவு இயந்திரங்கள் எத்தனை என எண்ணிக் கொள்ள வேண்டும். அந்த இயந்திரங்கள் தான் வண்டியில் ஏற்றப்படுகிறதா, இறக்கப்படுகிறதா என்பதை கவனிக்க வேண்டும்.
பூத் ஏஜென்ட்கள் எண்ணிக்கை:
1. ஒரு வாக்களிக்கும் பூத்திற்கு உள்ளே அமர ஒருவரும், அவரை மாற்றுவதற்கு 2 பேர் என மொத்தம் 3 பேர் அமரலாம். அல்லது 2 பேர் கூட போதும்.
2. மூன்று பேர் இருந்தாலும். உள்ளே ஒருவர் தான் உட்கார முடியும்.
பூத் ஏஜென்டை அமர்த்தும் முறை:
1. வேட்பாளர் அல்லது வேட்பாளரால் நியமிக்கப்பட்ட ஏஜென்ட் மட்டுமே பூத் ஏஜன்டை நியமிக்க முடியும்.
2. வேட்பாளர் / ஏஜென்ட் முன்னிலையில் பூத் ஏஜென்ட் கையெழுத்திட வேண்டும்.
3. தேர்தல் அதிகாரியிடம் கடிதத்தை கொடுக்கும்போது, பூத் ஏஜென்ட் கையெழுத்திட வேண்டும். கடிதத்தில் உள்ள கையெழுத்தும், அங்கே போடும் கையெழுத்தும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். இல்லையென்றால் பூத் ஏஜென்ட் நிராகரிக்கப்படுவார்.
4. தபால் வாக்கு அளிப்பவராக இருந்தால் 10 நாட்களுக்கு முன்பே கடிதம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் தேர்தல் நடக்கும் அன்று கடிதத்துடன் போனால் போதுமானது.
பூத் ஏஜென்ட் தகுதிகள்: 1. எழுத, படிக்க தெரிய வேண்டும்.
2. தமிழகத்தில் எந்த பகுதியிலாவது அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இருத்தல் அவசியம்.
3. அந்த வாக்குச்சாவடியில் வாக்களிப்பவராக, அதிலும் அவர் அமரும் அறையிலேயே வாக்களிப்பவராக இருந்தால் மிகவும் நல்லது.
4. அரசாங்க ஊழியர் பூத் ஏஜென்டாக அமரக்கூடாது. கண்டுபிடிக்கப்பட்டால், சிறை தண்டனை அல்லது அபராதம், அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
5. தேர்தல் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்களை பற்றிய அடிப்படை அறிவு இருப்பது நலம். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Post a Comment