தமிழகம் முழுவதும் பழுதடைந்த கணினிகளால் அரசு பள்ளிகளில் கணினி கல்வி கற்பித்தலில் சிக்கல்

Join Our KalviNews Telegram Group - Click Here
9080019831 - Add This Number In Your Whatsapp Groups - 9080019831


அரசுப்பள்ளிகளில் பழுதடைந்த கணினிகளால் மாணவர்களுக்கு கணினி கல்வியை அளிப்பதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.தமிழகத்தில் அரசு ஆரம்ப பள்ளிகள் 23,928, நடுநிலைப் பள்ளிகள் 7,260, உயர்நிலைப் பள்ளிகள் 3,044, மேல்நிலைப்பள்ளிகள் 2,727 ஆகியவை உள்ளன. இதில் ஆரம்ப பள்ளிகளில் 64,855 ஆசிரியர்களும், நடுநிலைப் பள்ளிகளில் 50,508 ஆசிரியர்களும், உயர்நிலைப் பள்ளிகளில் 27,891 ஆசிரியர்களும், மேல்நிலைப்பள்ளிகளில் 73,616 ஆசிரியர்களும் பணியாற்றுகின்றனர்.இதில் தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் 25,01,483 மாணவர்களும், 24,67,455 மாணவிகளும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 42,86,450 மாணவர்களும், 41,09,752 மாணவிகளும் படித்து வருகின்றனர்.

இப்பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு கணினி கல்வியை வழங்குவதற்காக அரசு மடிக்கணினி வழங்கி உள்ளது. இந்த கணினிகள் அனைத்தும் உரிய முறையில் பராமரிக்காததால் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் ஓரம் கட்டப்பட்டுள்ளன.
இதனால் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், கணினி கல்வியை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கு பாடம் தொடர்பான விவரங்களை திரையிட்டு காட்டுவதற்காக வழங்கப்பட்ட புரொஜக்டர்களும் பழுதடைந்து காட்சிப்பொருட்களாக பள்ளிகளில் ஓரம் கட்டி வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு பள்ளிகளில் பழுதடைந்து கிடக்கும் கணினிகள் பயன்பாடின்றி கிடப்பது, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கணினி சார்ந்த அறிவை வழங்க வேண்டும் என்ற அரசின் குறிக்கோள் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர்களும், மாணவர்களும் வேதனை தெரிவிக்கின்றனர். குறிப்பாக வேலூர் மாவட்டத்தில் 1,628 தொடக்கப்பள்ளிகளும், 509 நடுநிலைப்பள்ளிகளும், 197 உயர்நிலைப்பள்ளிகளும், 208 மேல்நிலைப்பள்ளிகள், 103 உண்டு உறைவிட பள்ளிகளில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களுக்காக வழங்கப்பட்ட கணினிகளில் 90 சதவீதம் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே வரும் கல்வியாண்டிலாவது கணினியை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வியாளர்களும், அரசு பள்ளிகளின் ஆசிரியர்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.இதுகுறித்து ஆசிரியர்கள் சங்கத்தினர் கூறியதாவது: தமிழகத்தில் அரசு நடுநிலைப்பள்ளிகளில் மாணவர்கள் கணினி கல்வி அறிவு பெறுவதற்காக கணினி மற்றும் மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான பள்ளிகளில் கணினிகள் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தனிப்பட்ட முறையில் சொந்த பணத்தில் செலவு செய்து சீரமைத்தால் தான் உண்டு. மற்றபடி இதற்காக அரசு சார்பில் நிதி ஒதுக்கப்படுவதில்லை. பல கோடியில் திட்டம் தீட்டி நிதி ஒதுக்கப்பட்டு, கணினிகள் வாங்கப்பட்டு அவற்றை உரியமுறையில் பராமரிக்காததால், அரசின் நோக்கம் கேள்விக்குறியாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இனியாவது கணினிகளை பராமரிக்க அரசு கவனம் செலுத்தவேண்டும். அப்போது தான் அரசு பள்ளி மாணவர்கள் கணினி சார்ந்த கல்வி கற்க முடியும். இவ்வாறு கூறினர்.

* சொந்த பணத்தை செலவு செய்யும் தலைமை ஆசிரியர்கள்
* அரசு நிதி ஒதுக்கீடு செய்ய கோரிக்கை
* வரும் கல்வியாண்டிலாவது சீரமைக்கப்படுமா?

Post a comment

0 Comments