Title of the document


கோடை கால நோய்கள் பரவாமல் தடுக்க கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் என்ன, அவற்றிலிருந்து நம்மை எவ்வாறு தற்காத்து கொள்ளலாம், பாதிக்கப்பட்டவர்களுக்கு எத்தகைய முதலுதவி அளிக்க வேண்டும் என்பன தொடர்பான விவரங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.

கோடை காலம் தீவிரமடையத் தொடங்கியுள்ள நிலையில், மாநிலத்தின் பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவாகி வருகிறது. வெயிலின் தாக்கத்தால் சரும நோய்கள், நீர்ச்சத்து இழப்பு, சின்னம்மை, கண் வறட்சி, சிறுநீர் பிரச்னை, மயக்கம், உடல் சோர்வு உள்ளிட்ட பாதிப்புகள் பரவலாக ஏற்படுகின்றன. இந்நிலையில், அவை வராமல் தவிர்ப்பதற்காக பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறை வெளியிட்டுள்ள வழிகாட்டி  குறிப்பேட்டில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
மனித உடல் சராசரியாக  98.6 டிகிரி வரையிலான வெப்பநிலையை ஏற்றுக்கொள்ளக்கூடிய தன்மை வாய்ந்தது. புறச்சூழலில் அதற்கு அதிகமான வெப்பநிலை நிலவும்போது வியர்வை மூலம் வெப்பம் வெளியேற்றப்பட்டு, சரியான தட்பவெப்பத்தை உடல் தக்கவைத்துக் கொள்ளும்.

அதேவேளையில், அதிக அளவில் வியர்வை வெளியேறும்போது, உடலில் உப்பு மற்றும் நீர்ச்சத்து குறைய வாய்ப்புள்ளது. இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். மேலும், சின்னம்மை போன்ற  நோய்களும் ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்த நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ள அதிக அளவில் நீர் அருந்த வேண்டும். தாகம் இல்லாவிடிலும், கோடை காலத்தில் குறிப்பிட்ட அளவு நீர் அருந்துவது அவசியம். சூடான பானங்களுக்கு பதிலாக மோர் கலந்த அரிசிக் கஞ்சி, இளநீர், மோர், உப்பு கலந்த எலுமிச்சை சாறு, ஓஆர்எஸ் உப்புக் கரைசல் ஆகியவற்றை அருந்தலாம்.
 நீர்ச்சத்து அதிகம் உள்ள வெள்ளரி, நுங்கு, தர்பூசணி போன்றவற்றை உட்கொள்ளலாம். வெயிலில் வெளியே செல்வதை கூடுமான வரை தவிர்க்க வேண்டும்.
வெயிலின் தாக்கத்தால் எவரேனும் மயக்கமடைந்தாலோ அல்லது சுய நினைவை இழந்தாலோ உடனடியாக முதலுதவி அளிக்க வேண்டும். அதைத் தொடர்ந்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு பாதிக்கப்பட்டவரை அழைத்துச் செல்ல வேண்டும்.
கோடை நோய்களைத் தடுப்பது தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி சேவையான 104 - ஐ அழைக்கலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post