வரும் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வெகுவாக உயரும்திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வெகுவாக உயரும் முதன்மை கல்வி அலுவலர் தகவல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை, வரும் கல்வி ஆண்டில் வெகுவாக உயரும் என முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார்.திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு பள்ளிகளில், வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை நேற்று முன்தினம் தொடங்கியது.

மேலும், கோடை விடுமுறை காலங்களில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது.அதன்படி, திருவண்ணாமலை அடுத்த துர்க்கைநம்பியந்தல் அரசு உயர்நிலைப் பள்ளியில், மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது.

அப்போது, 6ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்களை, முதன்மை கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் வழங்கி, மாணவர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர் மா.ரேணுகோபால், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பழனி, வட்டார கல்வி அலுவலர்கள் தேன்மொழி, குணசேகரன், வட ஆண்டாப்பட்டு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் வளர்மதி, ஆசிரியர் பயிற்றுநர் மீனாட்சி, ஆசிரியர்கள் ராஜேந்திரன், வில்லியம் ஜோசப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்தாவது: அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணியை ஏப்ரல் 1ம் தேதி முதல் தொடங்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கைக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அரசு பள்ளிகளின் சிறப்பு அம்சங்களை விளக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நடப்பு கல்வி ஆண்டில் 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களின் தேர்ச்சியை அதிகரிக்க பல்வேறு சிறப்பு முயற்சிகள் மேற்கொண்டோம். எனவே, நிச்சயமாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும், அரசு பள்ளிகள் மீது பெற்றோர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. எனவே, வரும் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வெகுவாக உயரும்' என்றார்.