அங்கீகாரமில்லாத 709 பள்ளிகள்: நடவடிக்கை எடுக்க கல்வித்துறை முடிவு

Join Our KalviNews Telegram Group - Click Here
9092837307 - Add This Number In Your Whatsapp Groups - 9092837307தமிழகத்தில் அங்கீகாரமில்லாமல் செயல்படும் 709 பள்ளிகள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி அங்கீகாரமின்றி எந்தவொருபள்ளியும் செயல்படவில்லை என்பதை முதன்மைக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என  மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்குப் பள்ளி கல்வித்துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்.

 அதன்படி,  வட்டாரக் கல்வி அலுவலர்கள் அவரவர் ஆளுகைக்குள்பட்ட பகுதிகளில் உள்ள ஒவ்வொரு அரசு உதவி பெறும்  பள்ளிகளுக்கும்,  மாவட்டக் கல்வி அலுவலர்கள் அவரவர் ஆளுகைக்குள்பட்ட பள்ளிகளில் உள்ள அரசு உதவி பெறும்,  அரசு உதவி பெறாத உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், சிபிஎஸ்இ,  ஐசிஎஸ்இ போன்ற வாரியங்களில் இணைப்புப் பெற்ற பள்ளிகள் மற்றும் மெட்ரிக். பள்ளிகளுக்கும் நேரில் சென்று அங்கீகார ஆணையினை கோரிப் பெற வேண்டும். அங்கீகார ஆணை முன்னிலைப்படுத்தாத பள்ளிகளின் பட்டியலைத் தயார் செய்து முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.  அந்தப் பட்டியலின் முடிவில் அதில் குறிப்பிடப்பட்டுள்ளபள்ளிகள் தவிர தங்களது கல்வி மாவட்டத்தில் அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் இல்லை என வட்டாரக் கல்வி அலுவலர்கள்,  மாவட்டக் கல்வி அலுவலர்கள் சான்றளிக்க வேண்டும்.

இந்த நடைமுறைகள் அனைத்தும் புதன்கிழமைக்குள் முடிவடைய வேண்டும். அங்கீகாரம் இன்றி செயல்படும் பள்ளிகள் சார்ந்த விவரத்தை அந்தந்த பகுதிகளில் செய்தித் தாள்கள் மூலமாக பொதுமக்கள் அறியும் வகையில் பத்திரிக்கைகள் செய்தியாக வெளியிட வேண்டும். வரும் கல்வியாண்டு (2019-2020) தொடங்கும்போது அவரவர் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் அங்கீகாரம் பெற்ற பள்ளிகள் என்பதையும், குழந்தைகளும் அங்கீகாரம் உள்ள பள்ளிகளில் கல்வி பயில்கின்றனர் என்பதையும் முதன்மைக் கல்வி அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என சுற்றறிக்கையில் பள்ளி கல்வி இயக்குநர்  குறிப்பிட்டிருந்தார்.  அங்கீகாரம் இல்லாத பள்ளிஎன்றால், பள்ளிகளின் முகப்பில் இந்தப் பள்ளி அங்கீகாரம் இன்றி செயல்படும் பள்ளி என்ற தகவலை ஒட்ட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டிருந்தார். மேலும், அனைத்து மாவட்டக் கல்வி அதிகாரிகளும் தங்களது மாவட்டங்களில் அங்கீகாரமின்றி செயல்படும் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, அது சார்ந்து பள்ளி வாரியாக அறிக்கையினை மே 29-ஆம் தேதிக்குள் பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.  அங்கீகாரமற்ற பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளத் தவறும் வட்டாரக் கல்வி அலுவலர்கள்,  முதன்மைக் கல்வி அலுவலர்கள் மீது தக்க ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் 709 தனியார் பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த கல்வியாண்டு முதல் அந்தப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தத் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.அங்கீகாரமில்லாத பள்ளிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும்  விளக்கம் அளிக்கத் தவறும்  பள்ளிகள் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளாக முடிவெடுக்கப்பட்டு, அந்தப் பள்ளிகள் குறித்து  நாளிதழ்களில் விளம்பரம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments