2 நாள் கல்விக் கண்காட்சி: நாளை தொடங்குகிறது


சென்னையில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம், விஐடி இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்வி நிறுவனம் இணைந்து நடத்தும் இரண்டு நாள் கல்விக் கண்காட்சி வரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (ஏப்.6, 7) நடைபெறுகிறது.
கல்வி வழிகாட்டி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு உயர் கல்வி குறித்து வழிகாட்டும் வகையில் இக்கண்காட்சியை தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

இதன் பகுதியாக இந்த ஆண்டு நடைபெறவுள்ள கண்காட்சியில் பொறியியல், மருத்துவம், வர்த்தக மேலாண்மை, விமானம், தொலைத்தொடர்பு, பேஷன் இன்ஸ்டிட்யூட், விவசாயம், செவிலியர் பயிற்சி ஆகியவை சார்ந்த கல்வி நிலையங்கள், கலை, அறிவியல் கல்லூரிகள், ஐ.ஏ.எஸ் பயிற்சிக் கல்லூரிகள், அயல்நாட்டு கல்வி என்று பல துறைகளில் சிறந்து விளங்கும் சுமார் 50-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் தங்கள் அரங்குகளை அமைக்க உள்ளன.

வெறும் கண்காட்சியோடு மட்டும் நின்றுவிடாமல் மாணவர்களுக்குப் பயன் தரக்கூடிய பல்வேறு நிபுணர்களின் ஆலோசனைகளும் இந்தக் கண்காட்சியில் வழங்கப்படுகின்றன.
தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் உன்னை அறிந்தால் என்ற தலைப்பில் உரையாற்றுகிறார். மன அழுத்தத்திலிருந்து மாணவர்கள் விடுபட மனோதத்துவ நிபுணர் டாக்டர் கீதா லட்சுமி ஆலோசனை வழங்குகிறார். மாணவர்களுக்கான ஊட்டச்சத்து நிறைந்த உணவை பரிந்துரைத்து ஆலோசனை வழங்குகிறார் ஊட்டச்சத்து நிபுணர் மல்லிகா சரவணன்.

மாதிரி நீட் தேர்வு: இந்தக் கண்காட்சியில் உயிரியல் பாட நிபுணர் டாக்டர் அழகு தமிழ்ச்செல்வி, மாணவர்களுக்கான மாதிரி நீட் தேர்வை நடத்துகிறார். அதனால், நீட் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு நீட் தேர்வை முன் கூட்டியே எழுதிப் பார்க்க ஒரு வாய்ப்பாக அமையும்.
இவ்வாறு பல்வேறு சிறப்பு பயிற்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கல்விக் கண்காட்சியை ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி, வேல்ஸ் கல்விக் குழுமம் , எஸ்.ஆர்.எம் கல்வி குழுமம், ஹிந்துஸ்தான் கல்விக் குழுமம், டாக்டர் எம்.ஜி.ஆர் கல்விக் குழுமம், எச்.சி.எல், ஏபிஆர்பி போன்ற கல்வி நிறுவனங்கள் இணைந்து வழங்குகின்றன.
சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (ஏப். 6, 7) காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை இக்கண்காட்சி நடைபெறுகிறது. அனுமதி இலவசம். தொடர்புக்கு: 92824 38117.