ஆசிரியர் பணி வேண்டுவோர் விண்ணப்பிக்கலாம்... TET தேர்வு அறிவிப்பு வெளியீடு!

அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளிகளில் நியமிக்கப்படும் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று அரசாணை வெளியிடப்பட்டது.

இதையடுத்து கடந்த 2013 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. ஆனால், கடந்தாண்டு நீதிமன்ற வழக்கு காரணமாக இந்த தேர்வு நடத்தப்படவில்லை.

எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது நடத்தப்படும் என ஆசிரியர் வேலை தேடும் பி.எட்., மற்றும் பிளஸ்-2 முடித்துவிட்டு ஆசிரியர் பயிற்சி முடித்த லட்சக்கணக்கானவர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இந்த நிலையில் 2019 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்வுக்கான(TET) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காலியிடங்கள் குறித்த அறிவிப்புகள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இந்த தேர்வின் மூலம் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணிகளுக்கு இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களும், 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியிடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களும் நியமனம் செய்யப்படுகிறார்கள்.

இதற்கான எழுத்துத் தேர்வு தாள் 1, தாள் 2 என இரு தாள்களைக் கொண்டது.
தகுதிகள்: தாள் 1: பிளஸ் 2 தேர்ச்சி பெற்று 2 ஆண்டு ஆசிரியர் பயிற்சி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் 4 ஆண்டு பி.எட். பயிற்சி தேர்ச்சி பெற்றவர்கள் எழுதலாம். இவர்கள் 5 ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியிடங்களில் பணிபுரிவதற்கான வாய்ப்பை பெறலாம். 150 மதிப்பெண்கள் கொண்டது.

தாள் 2: பட்டப்படிப்புடன், 2 ஆண்டு பி.எட் படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் எழுத தகுதியானவர்கள். இவர்கள் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியிடங்களில் பணிபுரிவதற்கான வாய்ப்பை பெறலாம். 150 மதிப்பெண்கள் கொண்டது.

வயதுவரம்பு: 18 வயது நிரம்பியவர்களும், 40 வயதிற்குள் இருப்பவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வுக் கட்டணம்: பொது மற்றும் பிசி பிரிவினர் ரூ.500 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.trb.tn.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தாள் -1, தாள்- 2 என்று தனித்தனியே விண்ணபிக்க வேண்டும். எழுத்துத் தேர்வுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http//trb.tn.nic.in/TET_2019/tett2019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி: 15.03.2019

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.04.2019