தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு - ஆசிரியர் சங்கங்கள் முடிவு !!!மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரிக்க ஆசிரியர் சங்கங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற உள்ளது. அதனுடன் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கிடையே தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரிக்க ஆசிரியர் சங்கங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

மக்களவைத் தேர்தலுக்காக எல்லா கட்சிகளும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளன. திமுகவின் தேர்தல் அறிக்கையில் மட்டுமே எங்கள் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டுள்ளன. பழைய ஒய்வூதிய திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் என உறுதிதரப்பட்டுள்ளது.ஆரம்ப பள்ளிகள் இணைப்புக்கு எதிர்ப்பு உட்பட பல்வேறு நியாயமான கோரிக்கைகளை முன்வைத்துதான் போராட்டத்தில் ஈடுபட்டோம். ஆனால், சம்பள உயர்வுக்காக போராடுவதாக கொச்சைப்படுத்தி, மக்களை எங்களுக்கு எதிராகஅதிமுக அரசு திசை திருப்பிவிட்டது.போராட்டத்தின்போது போலீஸாரைக் கொண்டு பெண் ஊழியர்கள் என்று பாராமல் மிகவும் சித்ரவதை செய்தனர். போராட்டம் முடிந்த பின் பணிக்கு சென்ற 5 ஆயிரம் ஆசிரியர்கள் பணியிட மாற்றம்செய்யப்பட்டுள்ளனர். பலருக்கு பதவி உயர்வு உட்பட பலன்கள் ரத்து செய்யப்பட்டன. இதுவரை பல்வேறு போராட்டங்கள் ஆசிரியர் சங்கங்கள் சார்பில் நடத்தப்பட்டுள்ளன. ஆனால், ஆசிரியர்களை இவ்வளவு மோசமாக நடத்தியது முதல்வர் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு மட்டும்தான்.

போராட்டத்தின்போது நிர்வாகிகளை ஒருமுறைகூட முதல்வர் அழைத்து பேசவில்லை.மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பழைய ஒய்வூதிய திட்டத்தை கொண்டு வருவதாக உறுதி அளித்தார். ஆனால், அவர்வழிவந்த இந்த அரசு அதற்கு எதிரான நிலைபாட்டை எடுத்துள்ளது. எனவே, தேர்தலில் 85 சதவீத ஆசிரியர் சங்கங்கள் திமுக கூட்டணியை ஆதரிக்க முடிவு செய்துள்ளோம். சில தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்களை பொறுத்து முடிவுகள் மாற்றப்படும்.

தபால் ஓட்டுகள்

பாமக எங்கள் நலன் சார்ந்து கோரிக்கை விடுத்தாலும் அவர் களால் எதையும் செய்ய முடியாது. இதை உணர்ந்துதான் தேர்தல் பணிகளில் எங்களை ஈடுபடுத்த அதிமுக எதிர்ப்பு தெரிவித்தது. அதை தேர்தல் ஆணையம்நிராகரிக்கவே தபால் ஓட்டுகளைில் முறைகேடுகளை அரங்கேற்ற அரசு திட்டமிட்டுள்ளதாக எங்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. அதை முறியடிப்பதற்கான முயற்சிகளை முன்னெடுப்போம். எனினும், எங்கள் குடும்ப உறுப்பினர்கள், உறவுகளின் வாக்குகளை அரசால் தடுத்து நிறுத்த முடியாது.இவ்வாறு அவர்கள் கூறினர்.