தனியார் பள்ளிக்கு நிகராக சிறந்து விளங்கும் அரசு பள்ளி: கணினி பயிற்சி, ஆங்கில கற்றலில் அசத்தும் மாணவர்கள்

 தனியார் பள்ளிகளுக்கு இணையாக வேலூரில் ஒரு அரசுப்பள்ளி கணினி பயிற்சி, ஆங்கில பேச்சுத்திறன், கற்றல் திறனுடன் அப்பகுதி மக்களின் மனம் கவர்ந்த பள்ளியாக விளங்கி வருகிறது.   வேலூர் அடுத்த சேண்பாக்கத்தில் ஊராட்சி ஒன்றிய தொடங்கப்பள்ளி கடந்த 1946ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.    கடந்த 1976ம் ஆண்டு நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக தற்போது வசந்தி என்பவர் பணியாற்றி வருகிறார்.   250க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். மற்ற அரசு மற்றும் தனியார் பள்ளிகளை ஒப்பிட்டு பார்க்கும்போது வேலூர் சேண்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குகின்றனர்.   


உதாரணமாக தேசிய திறனறி தேர்வில் அதிகளவிலான மாணவர்கள் தேர்ச்சி பெற்று மாத உதவித்தொகையாக 1,000 பெற்று வருகின்றனர்.   இந்த பள்ளியில் மாணவர்கள் தமிழுடன், ஆங்கிலமும் எளிதாக வாசிக்க சிறப்பு பயிற்சி அளித்து வருகின்றனர்.    தினமும் ஒவ்வொரு வகுப்பு மாணவர்களும் ஏதேனும் ஒரு தலைப்பை எடுத்துக்கொண்டு பிரார்த்தனை கூட்டத்தில் ஆங்கிலத்தில் வாசிக்க வேண்டும்.   இதன்மூலம் ஆங்கிலம் கற்பதோடு, மேடை பயமும் மாணவர்களுக்கு போக்கப்படுகிறது.   காந்தி, காமராஜர், அண்ணா, அப்துல்கலாம் என்று தலைவர்கள் பிறந்த தினத்தில் அவர்களை பற்றிய தகவல்கள் வாசிப்பது என்று மாணவர்களுக்கு பல்வேறு ஊக்கமளித்தல் நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.    அதோடு 5ம் வகுப்பு முதல் மாணவர்கள் கணினிகளை கையாள்வது, தட்டச்சு செய்வது, தட்டச்சு செய்தவற்றை எப்படி சேமித்து வைப்பது என்று கணினி தொடர்பான அடிப்படை கல்வி கற்பிக்கப்படுகிறது.    இவ்வாறு தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாணவர்களுக்கு கற்பிக்கப்படுவதோடு, பள்ளி ஆண்டுவிழாவையும் தனியார் பள்ளிகளுக்கு நிகராக வெகுசிறப்பாக நடத்தி வருகின்றனர்.   


இத்தகைய செயல்பாடுகளால் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ள இப்பகுதி குழந்தைகள் ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.  அதோடு அரசு பள்ளி சிறப்பாக செயல்படுவதை அறிந்த முன்னாள் மாணவர்களும் தங்கள் பங்கிற்கு இப்பள்ளிக்கு தேவையான பீரோ உள்ளிட்ட பொருட்களை வாங்கி கொடுத்துள்ளனர்.    அதோடு அப்பகுதி மக்களும் கரும்பலகைக்கு தேவையான பெயின்ட் உள்ளிட்ட பொருட்களை வாங்கி கொடுத்து தங்கள் பங்கிற்கு ஊக்கமளித்து வருகின்றனர்.   அரசு பள்ளியில் கற்பித்தல் சிறப்பாக இருப்பதால் மாணவர்களும் விரும்பி கல்வி கற்கின்றனர்.    இதுதொடர்பாக சேண்பாக்கம் பகுதியை சேர்ந்த மக்கள் கூறும்போது, ‘எங்கள் பகுதியில் இயங்கும் இப்பள்ளியால் எங்களுக்கு பெருமையாக உள்ளது.    தனியார் பள்ளிகளை சேர்ந்தவர்கள் கூட இங்கு வந்து கற்றல், கற்பித்தல் முறைகளை பற்றி அறிந்து செல்கின்றனர்.    அந்தளவுக்கு இப்பள்ளியின் ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர் வசந்தி என்பவர் தலைமையில் ஒருங்கிணைந்து செயல்படுகின்றனர்’ என்று கூறினர்.  


இப்பள்ளியை போன்று அனைத்து அரசுப்பள்ளிகளும் செயல்பட்டால் அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையில் சரிவு என்பது இருக்காது, அரசுப்பள்ளிகளை மூட வேண்டிய நிலையும் வராது என்கின்றனர் கல்வியாளர்கள்