போட்டித் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை: மதிப்பெண் முறைகேடுகளை தடுக்க திட்டம்

Join Our KalviNews Telegram Group - Click Here
9080019831 - Add This Number In Your Whatsapp Groups - 9080019831

 போட்டித் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை: மதிப்பெண் முறைகேடுகளை தடுக்க திட்டம்
மதிப்பெண் முறைகேடுகளைத் தவிர்க்கும் வகையில் ஆசிரியர் தகுதித் தேர்வு தவிர்த்து பிற போட்டித் தேர்வுகளை ஆன்லைன் மூலமாக நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வு, அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு, அரசு பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் தேர்வு, உதவி தொடக்கக் கல்வி அதிகாரி தேர்வு (தற்போது வட்டார கல்வி அதிகாரி தேர்வு), சிறப்பாசிரியர் தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது.

பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் தேர்வுமுறை தற்போது மாற்றப்பட்டுள்ள நிலையில், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு புதிதாக போட்டித் தேர்வையும் தேர்வு வாரியம் நடத்தும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு நடத்தப்பட்ட அரசு பாலிடெக்னிக் தேர்விலும் அதற்கு முன்பு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்விலும் மதிப்பெண் குளறுபடி மற்றும் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், எவ்வித புகாருக்கும் இடம் தராமல் தேர்வுகளை நடத்தவும், தாமதம் இன்றி தேர்வு முடிவுகளை வெளியிடவும் ஆன்லைன்வழி தேர்வுக்கு மாற ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்தது.
இதையடுத்து விரைவில் நடைபெறவுள்ள கணினி ஆசிரியர் தேர்வு முதல்முதலாக ஆன்லைன்வழியில் நடத்தப்படவுள்ளது. தற்போது இத்தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

இது குறித்து அதிகாரிகள் கூறியது:   பொதுவாக அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு, அரசு பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் தேர்வு, அரசு சட்டக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு, உதவி தொடக்கக் கல்வி அதிகாரி (தற்போது வட்டார கல்வி அலுவலர் தேர்வு), மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் தேர்வு, முதுநிலை விரிவுரையாளர் தேர்வு, சிறப்பாசிரியர் தேர்வு உள்ளிட்ட தேர்வுகளுக்கு குறைந்த  எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்களே விண்ணப்பிப்பார்கள்.
எனவே சூழலைப் பொருத்து குறைந்த எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்கள் பங்கேற்கும் தேர்வுகளை ஆன்லைன் வழியாகவும்,டெட் தேர்வு போன்ற அதிக விண்ணப்பதாரர்கள் கலந்துகொள்ளும் தேர்வுகளை வழக்கம்போல் ஓஎம்ஆர் ஷீட் முறையிலும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.  இதன் மூலம் தேர்வு முடிவுகளும் விரைவில் வெளியாகும் என்றனர்.

Post a Comment

0 Comments