வேறு துறைக்கு மாற்றப்படும் ஆசிரியர்கள்! பாதிக்கப்படப்போவது யார்?

Join Our KalviNews Telegram Group - Click Here

வேறு துறைக்கு மாற்றப்படும் ஆசிரியர்கள்! பாதிக்கப்படப்போவது யார்?

தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து நடந்தவண்ணம் உள்ளன. அதுவும் தேர்தல் நெருங்கும் சமயம் என்பதால், அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக பல்வேறு துறையைச் சேர்ந்தகளும் தங்களின் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஜனவரி மாதத்தில் தொடர் போராட்டங்களை மேற்கொண்ட அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர், தங்களின் கோரிக்கைகள் நிறைவேறாததால், மார்ச் 8-ம் தேதி தமிழகம் முழுவதும் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்
கடந்த காலங்களில் நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ போராட்டங்களில் பங்கேற்றவர்களில் அதிகப்படியானோர் இடைநிலை ஆசிரியர்கள் ஆவார்கள். போராட்டத்திற்குப் பிறகு ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டதுடன், பலருக்கு பணியிட மாற்றமும் வழங்கப்பட்டது.
இதற்கிடையே அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துவருவதைக் கருத்தில்கொண்டு, கடந்த டிசம்பர் மாதம் முதல் தமிழகம் முழுவதும் உள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தெரிவித்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. 
மேலும் எல்.கே.ஜி,  யூ.கே.ஜி வகுப்புகளுக்காக, நடுநிலைப் பள்ளி வளாகங்களில்  கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு, அதில் சேரும் குழந்தைகளுக்கு நான்கு செட் சீருடைகள், ஒரு ஜோடி காலணிகள், பயிற்சி முடித்ததற்கான சான்றிதழ்கள் பள்ளிக் கல்வித் துறையின் சார்பாகவும், ஆசிரியர்களுக்குக் கற்பிக்கும் உபகரணங்கள், குழந்தைகளுக்கான எழுதுபொருள்கள் போன்றவை சமூக நலத்துறையின் சார்பாகவும் வழங்கப்படும் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது
தனியார் மழலைப் பள்ளிகளில் அதிகளவு தொகை, கல்விக் கட்டணமாக வசூலிக்கப்படுவதாலும், தமிழக அரசின் அங்கன்வாடி பள்ளிகளில் சேரும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, அந்த எண்ணிக்கையை அதிகரித்து, மீட்டுருவாக்கும்  விதமாகவும் இந்தத் திட்டம் இருப்பதாகப் பல்வேறு தரப்பைச் சேர்ந்தவர்களும் தங்களின் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்
என்றாலும் புதிதாகத் தொடங்கப்படும் எல்.கே.ஜி-யூ.கே.ஜி வகுப்புகளுக்கான ஆசிரியர்களை நியமிப்பதில்தான் சிக்கல் ஏற்பட்டுள்ளது.   இது மாதிரியான மழலைப் பள்ளிகளில்  குழந்தைகளுக்குப் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் கிண்டர் கார்டன் பயிற்சி அல்லது மாண்டிசோரி  கல்வியை முடித்திருக்க வேண்டும். இந்த நடைமுறைக்கு மாறாக, பல அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதால் உபரியாக உள்ள ஆசிரியர்களை,  மழலைப் பள்ளிகளுக்கு பணியிட மாற்றம் செய்துள்ளர். அப்படி பணியிட மாற்றம் செய்தவர்களில் பெரும்பாலானோர் இடைநிலை ஆசிரியர் பயற்சியை முடித்தவர்கள் என்பதுதான் வேடிக்கை. 
மேலும்  மழலைப் பள்ளிகளுக்கான போதிய ஆசிரியர்களை நிரப்ப சில ஆசிரியர்களுக்குப் பணியிட மாற்றம் அளிக்கப்பட்டு மழலைப் பள்ளிகளில் வேலை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.  மழலைப் பள்ளிளுக்கான  முறையான பயிற்சி பெறாத ஆசிரியர்களை குழந்தைகளுக்குப் பாடம் கற்பிக்க நியமிப்பதால், பாதிக்கப்படப் போவது முதலில் குழந்தைகள்தான்.
இதுகுறித்து பேசிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கத்தைச்  சேர்ந்தவர்கள், “இடைநிலை ஆசிரியர்களுக்கு பணியில் சேரும்போது வழங்கப்பட்ட பணி உத்தரவில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் ஆசியராக பணியமர்த்தப்படுவார்கள் என்றுதான் குறிப்பிடப்பட்டிருக்கும். 
ஆனால், இப்போது பதவியிறக்கம் செய்யும்விதமாக இடைநிலை ஆசிரியர்களை மழலைப் பள்ளி ஆசிரியர்களாக நியமிப்பது அநியாயமான செயல்.  அதேபோல் ஆசிரியர்களுக்கு பணிமாறுதல் வழங்கினால்கூட அதை ஏற்கனவே பணியாற்றி வந்த துறையின் கீழ்தான் பணி வழங்க வேண்டும்.  ஆனால், அங்கன்வாடி  மையங்கள் தமிழக அரசின் சமூக நலத்துறையின் கீழ் செயல்படுபவை, பள்ளிக் கல்வித்துறையின் கீழ் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களை எப்படி துறை மாற்றி பணியமர்த்த உத்தரவிட முடியும்?
அதேபோல் மழலைப் பள்ளிகளுக்கு வகுப்பு எடுப்பதற்காக கிண்டர் கார்டன் மற்றும் மாண்டிசோரி பயிற்சி  பெற்ற பலரும் வேலை வாய்ப்பில்லாமல் இருக்கின்றனர். அவர்களுக்கான வேலை வாய்ப்புகளும் இதனால் பாதிக்கப்படும். நான்குக்கும் மேற்பட்ட அமைப்புகள் இவற்றை எதிர்த்து வழக்குப் பதிவு செய்துள்ளோம். மிகத் தாமதமாக ஒருவர் தனியாகப் பதிவு செய்த வழக்கு மட்டும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது,  இதேபோல் தற்போது வேறு துறைக்கு பணி மாறுதல் வழங்கப்பட்ட நிலையில் ஊதியத்தில் எந்த முரண்பாடுகளும் இல்லை
ஆனால் பிற்காலத்தில் ஊதிய உயர்வில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.  இது தொடர்பாக தமிழ்நாடு  ஆசிரியர் மன்றம் தொடர்ந்த வழக்கில் ‘இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடியில் பணியமர்த்தும்பட்சத்தில் ஆசிரியர்களின் ஊதியத்தைக் குறைத்து வழங்கக் கூடாது’ என்று வழிகாட்டுதல் வழங்கியுள்ளதைத் தொடர்ந்து அவர்கள் மேல்முறையீடு செய்ய தயாராகி வருகின்றனர் ” என்றார்.
அரசு சில நல்ல  திட்டங்களை அறிக்கையில் வெளியிட்டாலும் அவற்றை நடைமுறைப்படுத்தும்போது ஏற்படும் சிக்கல்களைப் போக்க  உடனடி கவனம் செலுத்துதல் வேண்டும். அப்போதுதான், அந்தத் திட்டங்கள் சென்று  சேர வேண்டியவர்களை முழுமையாகச் சென்றடையும்
============================================================================================ 👉👉👉 கீழே உள்ள WhatsApp Button ஐ கிளிக் செய்து Atleast ஒருவருக்காவது Share பண்ணுங்க, இந்த செய்தி யாரேனும் ஒருவருக்காவது பயன்படும் !! ============================================================================================

கருத்துரையிடுக

0 கருத்துகள்