Title of the document

மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி

படிப்பில் பிடிப்பு இல்லாமல், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதில் ஆர்வம் கொள்ளாமல் இருந்த மாணவர் ஒருவரை, சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர் வீட்டுக்கே சென்று, கவுன்சலிங் கொடுத்து உற்சாகமாக்கி இருக்கிறார். மற்ற மாணவர்கள் அளித்த ஒத்துழைப்பில் அந்த மாணவனுக்கு நல்ல பயிற்சி கொடுக்க ஆசிரியர் முடிவு செய்திருக்கிறார். இதனால் உற்சாகமாகி, '90 சதவிகிதம் மார்க்குகள் எடுப்பேன்' என்று அந்த மாணவர் கூறி இருப்பது பலரது பாராட்டையும் பெற்றிருக்கிறது.

கரூர் மாவட்டம், வெள்ளியணையில் இயங்கி வருகிறது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி. இந்தப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் சுதர்சன் என்ற மாணவர், கடந்த ஒரு மாதம் பள்ளிக்கு சரியாக வருவதில்லை. படிப்பில் ஆர்வமின்றி காணப்பட்டிருக்கிறார். பொதுத்தேர்வு நடப்பதால், தேர்வுகளையும் சரியாக எழுதவில்லையாம். இதை அறிந்த அந்தப் பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர் தனபால், மாணவரின் வீட்டுக்கு நேரே சென்று, சுதர்சனுக்கு உளவியல் நீதியாக ஆலோசனை வழங்கி, கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி இருக்கிறார். ``நாங்க ஏழைபாழைங்க. நல்லா படிச்சு, பொழச்சுக்கடான்னா, ஊதாரியா போயிருவான் போலிருக்கு சார். இவன் பதரா போனா, எங்க குடும்பமே சிதறிடும்' என்று அவரின் பெற்றோர்களும் கண் கலங்கி இருக்கின்றனர். ஆசிரியரும், சுதர்சனுக்கு அறிவுரை வழங்கிவிட்டு, ``நாளை வந்து உன்னை பள்ளிக்கு அழைத்துச் செல்கிறேன்'' என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறார். மாணவனும் பள்ளிக்கு வர சம்மதித்தான். குறிப்பிட்டதுபோல் நேற்று காலை மாணவன் வீட்டுக்குச் சென்ற தனபால், தயாராக இருந்த சுதர்சனை அழைத்திருக்கிறார். இருவரும் இரு சக்கர வாகனத்தில் பள்ளி சென்றிருக்கிறார்கள்.

அதன்பிறகு நடந்தவற்றை ஆசிரியர் தனபால் கூறுகையில், ``காலை 9.00 முதல் மாலை 6.10 மணி வரை அவனுக்கு சக மாணவர்களுடன் அறிவியல் பாடம் பயிற்சி கொடுத்தோம். காலை 9.00 - 1.00 மணி வரை இயற்பியல், மதியம் 1.30 மணி முதல் 3.00 மணி வரை வேதியியல், மாலை 3.15 முதல் 6.00 மணி வரை உயிரியல் பாடம் என 1,2,5 மதிப்பெண் வினா விடைகள் கரும்பலகையில் நான் எழுத, மாணவர்கள் கவனச் சிதறலின்றி எழுதிப் பார்த்தனர். கிட்டத்தட்ட நேற்று மட்டும் 500 மதிப்பெண்களுக்கு மேல் பயிற்சி பெற்று, விடைத்தாள்களை தனது பெற்றோர்களிடம் காண்பிக்க எடுத்துச் சென்றனர். இடையிடையே பிஸ்கட், தண்ணீர், சிறு உடற்பயிற்சி அளித்ததால் மாணவர்கள் மாலை வரை சோர்வின்றி காணப்பட்டனர். சுதர்சன் மிகுந்த ஆர்வமாயிட்டான். மாலை 6.10 மணிக்கு சுதர்சனை எனது இரு சக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு, 12 கி.மீ பயணித்து மாணவன் வீட்டில் கொண்டுபோய் விட்டேன். வீட்டில் சுதர்சனின் அம்மாவும், தங்கையும் இருந்தார்கள். 
சுதர்சன் அம்மா, `என் மகன் எப்படி படிக்கின்றான்?' என என்னிடம் கேட்டார். அதற்கு நான், `சுதர்சனிடம் கேட்போம்' என்றேன். சுதர்சன் தன் அம்மாவிடம், `இன்று பள்ளி சென்று அறிவியல் பாடம் படித்ததால், நாளைய தேர்வில் நான் 90% எடுப்பேன்' என்றான். அதைக் கேட்ட அவனது தாயின் கண்களில் ஆனந்தக் கண்ணீர். `சார் நானும், என் மகனும் உங்களை வாழ்க்கையில் மறக்கவே மாட்டோம். நன்றி சார்'னு சொன்னார். எனக்கு நெகிழ்ச்சியா இருந்துச்சு. மாணவனுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு, இன்றைய பணியை சிறப்பாக செய்த ஆத்ம திருப்தியுடன் வீடு திரும்பினேன். இன்னைக்கு சுதர்சன் தேர்வை நல்லபடியா எழுதி இருக்கான். `சொன்ன மார்க்கை வாங்கிடுவேன்' என உற்சாகமா சொல்றான். இன்னைக்கு மாணவர்களுக்கு எல்லாம் தெரியுது. ஆனால், சின்ன விசயம்னாலும், `நம்மால முடியாது'னு சோர்ந்து போயிருறாங்க. அதனால், இன்றைய மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை தேவை" என்றார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post