ஓவியம் வரைந்து அரசு பள்ளியை அழகுபடுத்தும் ஆசிரியர்கள் : ஏமம் கிராமத்தில் புது டெக்னிக்உளுந்தூர்பேட்டை அருகே ஏமம் கிராமத்தில் உள்ளது அரசு நடுநிலைப்பள்ளி. இந்த பள்ளியில் ஏமம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 130க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் பயிலும் கிராமப்புற மாணவ, மாணவிகளுக்கு தரமான கல்வியை அளிக்கும் வகையில் ஆசிரியர்கள் ஏற்கனவே ஸ்மார்ட் கிளாஸ் மற்றும் ஆங்கிலம் சரளமாக பேசுவதற்கான பயிற்சிகள் அளித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பள்ளியில் வருகிற கல்வி ஆண்டில் தனியார் பள்ளிக்கு நிகராக அதிக மாணவர்களை சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் பள்ளியை அழகு
படுத்தும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.

இதன் ஒரு கட்டமாக தலைமை ஆசிரியர் செல்வக்குமார் மற்றும் ஆசிரியர்கள் கலைவாணி, பரமகுரு, விண்ணரசன் உள்ளிட்ட ஆசிரியர்கள் தங்களது சொந்த செலவில் பெயிண்ட் வாங்கி பள்ளியின் சுற்றுச்சுவர் மற்றும் பள்ளியின் வளாகம் முழுவதும் வர்ணம் அடித்து வருகின்றனர்

இது மட்டுமின்றி சிறுவர்கள் மற்றும் மாணவர்களை கவரும் வகையில் அழகிய படங்களையும், பூக்களையும் வரைந்து வருகின்றனர். இதனை ஏமம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்து செல்கின்றனர். தனியார் பள்ளிக்கு நிகராக அரசு பள்ளியை அழகுபடுத்தி கிராமப்புற மாணவர்களை அதிக அளவு அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் வர்ணம் தீட்டி பள்ளி வளாகத்தை அழகு படுத்திய தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்களை கிராம மக்கள் பாராட்டினர்.