அரசுப் பள்ளிகளில் துப்புரவுப் பணியாளர் பணி: இனி நேரடி நியமனம் இல்லை

 தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் துப்புரவுப் பணியாளர்கள் இனிமேல் அரசால் நேரடியாக நியமிக்கப்படமாட்டார்கள் எனவும்,  வெளிமுகமை (அவுட்சோர்சிங்) மூலம் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப்யாதவ் வெளியிட்ட  அரசாணை: 
 தமிழகத்தில், கடந்த 2010-ஆம் ஆண்டு முதல்வர் வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில் அரசு பள்ளிகளில் 2,001 காவலர் பணியிடங்கள் காலமுறை ஊதியத்திலும், 2,999 துப்புரவுப் பணியிடங்கள் சிறப்பு காலமுறை ஊதிய விகிதத்திலும் அனுமதிக்கப்பட்டது. 
தமிழ்நாடு அடிப்படைப் பணி விதிகளின் அடிப்படையில், நேரடி நியமனத்துக்காக  வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து தகுதியான நபர்களின் பெயர் பட்டியல் பெறப்பட்டு 1,495 இரவு காவலர் பணியிடங்களும் 2,213 துப்புரவாளர் பணியிடங்களும் சுழற்சி முறையில், தகுதிவாய்ந்த நபர்கள்  மூலம்  நிரப்பப்பட்டன.
இவர்களில், சிறப்பு காலமுறை ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்ட துப்புரவாளர்கள், பணியில் சேர்ந்த நாள் முதல் காலமுறை ஊதியம் வழங்கக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் 2,213 துப்புரவுப் பணியாளர்களில் தற்போது பணியில் உள்ள 1,694 நபர்களுக்கு மட்டும், அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்து வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.  
அதனடிப்படையில், அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கலாம் என அரசு ஆணையிடுகிறது. இனி வரும் காலங்களில், 2012ஆம் ஆண்டு மார்ச் 2-ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசு ஆணையின் அடிப்படையிலும், அதற்கு முன்னர் உருவாக்கப்பட்ட அனைத்துத் துப்புரவாளர் பணியிடங்களும் நிரப்பப்பட மாட்டாது.  மேலும் ,சிறப்பு காலமுறை ஊதியத்தில் நியமிக்கப்பட்ட 2,213 துப்புரவுப் பணியாளர்களின் ஓய்வுக்குப் பிறகு, அந்தப் பணியிடங்கள் நிரப்பப்பட மாட்டாது. 
இனிமேல்,  துப்புரவுப் பணியிடங்கள் வெளி முகமை (அவுட்சோர்சிங்)  மூலமாக மட்டுமே நிரப்பப்படும். இதற்கான ஆணைகள் தனியாக பிறப்பிக்கப்படும்  என அதில் கூறப்பட்டுள்ளது. 
இந்த அரசாணையின் அடிப்படையில் இனிமேல் அரசுப் பள்ளிகளில் துப்புரவுப் பணியாளர்கள் அரசால் நேரடியாக நியமிப்பதில்லை என்பதில் உறுதியாகியுள்ளது.