Title of the document
 அண்ணா பதக்க பரிசுத் தொகை ரூ.10 ஆயிரத்துடன் ரூ.5 ஆயிரத்தை சேர்த்து தான் படித்த அரசு பள்ளிக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நன்கொடை வழங்கினார்.  பொன்னேரியை அடுத்த பெரியகாவனம் கிராமத்தை சேர்ந்தவர் டி.ராஜாங்கம். இவர் காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிகிறார்.  இவரது பணியை பாராட்டி சமீபத்தில் தமிழக அரசு இவருக்கு அண்ணா பதக்கம் வழங்கி கவுரவித்தது.   ரூ.10 ஆயிரம் பரிசு தொகையும் வழங்கப்பட்டது. அந்த பரிசு தொகையுடன் ரூ.5 ஆயிரத்தையும் சேர்த்து ரூ.15 ஆயிரம் ரூபாயை தான் படித்த சின்னகாவனம் அரசு நடுநிலைப்பள்ளிக்கு அவர் நன்கொடையாக வழங்கினார்.

 தனது பள்ளி கால நண்பர்களுடன் தான் படித்த பள்ளிக்கு சென்றார். அங்கு பள்ளி தலைமை ஆசிரியை லதா ராஜேஷிடம் அந்த தொகையை வழங்கினார்.  இதுகுறித்து நிருபர்களிடம் கூறுகையில், பள்ளியில் 1975-ம் ஆண்டில் இருந்து 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புவரை படித்தேன்.    அப்போது என்னுடன் 30 மாணவர்கள் படித்தனர்.  உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி படிப்பை பொன்னேரி மேல் நிலைப்பள்ளியில் படித்தேன். அண்ணா பதக்கத்துக்காக எனக்கு கிடைத்த பரிசு தொகையை நான் படித்த பள்ளியின் வளர்ச்சிக்காக வழங்கினேன்.   சில நாட்களுக்கு முன்பு என்னுடன் படித்த சில நண்பர்களை சந்தித்தேன். அப்போது எங்களது பள்ளி கால நினைவுகள் குறித்து மனம் விட்டு பேசி மகிழ்ந்தோம் என்றார். 

பள்ளி தலைமை ஆசிரியை லதா ராஜேஷ் கூறும் போது, “பள்ளியின் மீதான நம்பிக்கையே பழைய மாணவர்களை ஒன்றிணைத்தது. இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் வழங்கிய நன்கொடை பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். இப்பள்ளிக்கு பெற்றோர்களும் தங்களால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும்” என்றார்.  பள்ளிக்கு வந்த இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் வளாகத்தை சுற்றிப் பார்த்தார். பள்ளியில் நடந்த தனது குழந்தை கால அனுபவங்களை நினைவு கூர்ந்தார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post