குறைந்த மாணவர்களுடன் இயங்கும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளுடன் இணைப்பு : பள்ளிக்கல்வித்துறை திட்டம்

 தமிழகத்தில் குறைந்த எண்ணிக்கையுடன் செயல்படும் அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் அருகில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுடன் இணைக்கும் நடவடிக்கையை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டுள்ளது   .தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்டத்துக்கு ஒரு பள்ளி வீதம் மாடர்ன் பள்ளியாக மாற்றப்பட்டு அப்பள்ளிகளில் டிஜிட்டல் திரை, கணினி, நவீன வகுப்பறைகள் என நவீன உட்கட்டமைப்பு வசதிகள் சமீபத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.    ஆனாலும் தனியார் பள்ளிகள் மீதான மோகம் இன்னும் குறையவில்லை. இதனால் அரசுப்பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வி உட்பட கற்றல், கற்பித்தல் முறைகளில் மாற்றம், சிபிஎஸ்இ அடிப்படையிலான பாடத்திட்டம் என்று பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தும் மாணவர் எண்ணிக்கை உயரவில்லை.   இதையடுத்து கடந்த ஆண்டு மாணவர் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டி ஆசிரியர்களுக்கு இலக்கை நிர்ணயித்ததுடன், அரசு கெடுவும் விதித்தது. ஆனாலும் எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லை என்பதே தெரிய வந்தது.    இதையடுத்து மாணவர் எண்ணிக்கை மிகவும் குறைந்த ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகளை அருகில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுடன் இணைக்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.    தமிழகத்தில் மொத்தம் 2,553 ஓராசிரியர் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரியில் 195, திருவண்ணாமலையில் 159, வேலூரில் 127, விழுப்புரத்தில் 113, தருமபுரியில் 131 பள்ளிகள் உள்ளன.   அதேபோல் 16 ஆயிரத்து 421 ஈராசிரியர் பள்ளிகள் உள்ளன. இதில் சென்னை, விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்களில் உள்ள 16 ஈராசிரியர் பள்ளிகளில் ஓராசிரியர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.    ஆசிரியர், மாணவர் விகிதாச்சார நிர்ணயத்துக்கு மாறாக 387 ஓராசிரியர் பள்ளிகளில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.    இதில் வேலூர் 55, காஞ்சிபுரம் 49, கிருஷ்ணகிரி 36, கடலூர் 27, சென்னை 25, தருமபுரி 25 என பள்ளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.    அதேபோல் வெறும் 5 குழந்தைகள் மட்டுமே பயிலும் 55 பள்ளிகள் மாநிலம் முழுவதும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.   இந்த ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகளில் மொத்தம் 4.5 லட்சம் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.   மாநிலம் முழுவதும் 21 ஆயிரத்து 931 ஆசிரியர் காலி பணியிடங்கள் உள்ளது. இச்சிக்கலுக்கு தீர்வு காணவும், அரசுப்பள்ளிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.   அதன்படி மாநிலம் முழுவதும் மாணவர் எண்ணிக்கை மிகவும் குறைந்த பள்ளிகளாக கண்டறியப்பட்ட 3,500க்கும் மேற்பட்ட ஊரகப்பகுதிகளில் இயங்கும் பள்ளிகளை அருகில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளியுடன் இணைக்க முடிவெடுத்துள்ளது.   இதன் மூலம் நடுநிலை, உயர்நிலைப்பள்ளிகளில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களை பணி நிரவல் மூலம் சரி செய்யவும், அதிகப்படியான ஆசிரியர்களை ஆசிரியரல்லாத பள்ளிகளுக்கு மாற்றிவிடவும் பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் தெரிவிக்கின்றன.