Title of the document

இதோ, அதோ என்று தேர்தல் தேதியும் அறிவித்தாகி விட்டது. இனி தொகுதி மற்றும் வேட்பாளர் அறிவிப்புதான் பாக்கி. ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச் செல்ல அனுமதியில்லை என்பது உட்பட, தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளும், கட்டுப்பாடுகளும் நேற்று முன் தினமே அமலுக்கு வந்து விட்ட நிலையில், அனைவரும் அவற்றை பின்பற்றுமாறு, கோவை கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
லோக்சபா தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக, அரசியல் கட்சியினருடன் கலந்தாலோசனை கூட்டம், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் ராஜாமணி தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., ராமதுரைமுருகன், உதவி தேர்தல் அலுவலர்கள் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் கலெக்டர் ராஜாமணி பேசியதாவது:தேர்தல் நன்னடத்தை விதிகள், அமலுக்கு வந்து விட்டன. அவற்றை அரசியல் கட்சியினர் முழு அளவில் ஏற்று, கடைப்பிடிக்க வேண்டும். பொது இடங்களில் பேனர்கள், பிளக்ஸ் வைப்பது, விளம்பரங்கள் செய்வது என, எந்த வகையிலும் விதிகளை மீறக்கூடாது. முறையான அனுமதியோடு விளம்பரம் செய்யலாம்.தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை கொண்டு, தேர்தல் பிரசார நடவடிக்கை இருக்கக்கூடாது.
தேர்தல் பறக்கும் படையினர், தங்கள் வேலையை துவக்கி விட்டனர். அவர்கள், 24 மணி நேரமும் பணியில் இருப்பர்.10 சட்டசபை தொகுதிகளிலும் சேர்த்து, மொத்தம், 90 குழுவினர், தேர்தல் செயல்பாடுகளை கண்காணிப்பர்; வாகனங்களையும் சோதனை செய்வர்.ரூ.50 ஆயிரம்தான் லிமிட்!பணம் கொண்டு செல்வதற்கு, ரூ.50 ஆயிரம் வரை, அனுமதி தேவையில்லை. அதற்கு மேல் பணம் இருந்தால், கணக்கு வேண்டும். உரிய ஆவணங்கள் இருக்க வேண்டும்.
அத்துடன் வருமான வரித்துறையும் விசாரணைக்கு வரும்.நன்னடத்தை விதிகளின்படி, பொது இடங்களில் இருக்கும், சிலைகள் மூடி வைக்கப்பட வேண்டும். படங்கள் அகற்றப்பட வேண்டும். இதில், காந்தி, திருவள்ளுவர், அம்பேத்கர் சிலைகள், படங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.படங்கள், போஸ்டர், பேனர் அகற்றுவதற்கு நாளை(இன்று) காலை 6:00 மணி வரை அவகாசம் தரப்பட்டுள்ளது. புகார்கள், சந்தேகங்கள் இருந்தால், தேர்தல் ஆணையத்தின் தொடர்பு மையத்தை, 1950 என்ற கட்டணம் இல்லாத போன் மூலம் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, கலெக்டர் கூறினார்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post