Title of the document

தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் வெள்ளிக்கிழமை (மார்ச் 1) தொடங்குகிறது. 
கடந்த ஆண்டுவரை ஒவ்வொரு பாடங்களிலும் 200 மதிப்பெண்களுக்கு தேர்வெழுதிய மாணவர்கள், தற்போது முதல்முறையாக 100 மதிப்பெண்களுக்கு தேர்வெழுதவுள்ளனர்.
தமிழக பள்ளிக் கல்வியின் சமச்சீர் பாடத் திட்டத்தில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் வெள்ளிக்கிழமை தொடங்கி, மார்ச்19-ஆம் தேதி முடிகிறது.
இதற்காக மொத்தம் 2,941 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 7,068 பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 பேர் தேர்வு எழுதவுள்ளனர். இதைத் தொடர்ந்து தேர்வு முடிவு வரும் ஏப்ரல் 19-இல் வெளியிடப்படவுள்ளது.
நிகழாண்டு பிளஸ் 2 மாணவர்களுக்கு முதல் முறையாகத் தேர்வு முறை மாற்றப்பட்டுள்ளது.  கடந்த கல்வியாண்டு வரை ஒரு பாடத்துக்கு 200 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 1,200 மதிப்பெண்களுக்கு தேர்வெழுதிய மாணவர்கள் நிகழாண்டு பொதுத்தேர்வு முதல்  மொத்தம் 600 மதிப்பெண்களுக்குத் தான் (ஒரு பாடத்துக்கு தலா 100 மதிப்பெண்) எழுதுகின்றனர்.
தேர்வின்போது துண்டுத்தாள் வைத்திருத்தல், துண்டுத்தாள்களை பார்த்து எழுத முயற்சித்தல், பிற மாணவர்களை பார்த்து எழுதுதல், தேர்வு அதிகாரியிடம் முறைகேடாக நடந்து கொள்ளுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல் மற்றும் ஆள்மாறாட்டம் போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் தேர்வர்களுக்கு விதிமுறைகளின்படி உரிய தண்டனைகள் வழங்கப்படும்.
ஒழுங்கீன செயல்களுக்கு உடந்தையாகவோ அல்லது ஊக்கப்படுத்தவோ பள்ளி நிர்வாகம் முயன்றால் பள்ளித் தேர்வு மையத்தை ரத்து செய்தும், பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்திட பள்ளிக்கல்வி மற்றும் மெட்ரிக்.  பள்ளிகள் இயக்குநருக்கு பரிந்துரை செய்தும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். 
தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம் மற்றும் கழிப்பிட வசதிகளை முறையில் அமைத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் தேர்வாக வெள்ளிக்கிழமை மொழிப் பாடங்களுக்கானத் தேர்வு நடைபெறவுள்ளது

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post