அரசு பள்ளியில் மாணவிகளே நூலகம் துவங்கினர்

Join Our KalviNews Telegram Group - Click Here
Add This Number In Your Whatsapp Groups - 8608844408

600 புத்தகங்கள் வழங்கி அசத்தல்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அடுத்த கீரமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒவ்வொரு ஆண்டும் கல்வியில் சாதனை படைத்து வரும் பள்ளிகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இந்நிலையில், மாணவிகளை சாதிக்க தூண்டும் விதமாக முன்னாள் மாணவிகள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் ஒவ்வொரு ஆண்டும் தேர்வில் வெற்றி பெற்று சிறப்பிடம் பிடிக்கும் மாணவிகளுக்கு தங்க நாணயம், ரொக்க பரிசுகள் என வழங்கி சிறப்பித்து வருகின்றனர்.

இந்நிலையில், பள்ளியில் படிக்கும் மாணவிகள் இணைந்து பள்ளியில் நூலகம் தொடங்க திட்டமிட்டனர். இதனால், பள்ளியில் படிக்கும் சுமார் 825 மாணவிகளும் இணைந்து 600 புதிய புத்தகங்களை வாங்கி பள்ளி ஆசிரியர்களிடம் வழங்க திட்டமிட்டனர். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன் புதுக்கோட்டையில் நடந்த புத்தக திருவிழாவில் வாங்கப்பட்ட புத்தகங்களை ஆசிரியர்களிடம் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார்.  பிடிஏ தலைவர் சின்னசாமி முன்னிலை வகித்தார். விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர்களிடம் 600 புத்தகங்களை மாணவிகள் வழங்கினர். மாணவிகளின் ஆர்வத்தை மேலும் தூண்டும்விதமாக பள்ளியில் பணிபுரியும் 30 ஆசிரியர்களும் தங்களுடைய பங்காக புத்தகங்களை பள்ளிக்கு வழங்கினர். மாணவிகளிடம் இருந்து பெறப்பட்ட புத்தகங்களை பள்ளி நூலக அலுவலர் நதிராபேகத்திடம் பள்ளி தலைமை ஆசிரியர் வழங்கினார்.

இதுகுறித்து புத்தகம் வழங்கிய பள்ளி மாணவிகள் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினத்தில் ஆசிரியர்கள் மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடுவார்கள். அதனால் அந்த நாளில் மாணவிகள் அனைவரும் ஆசிரியர்களிடம் புத்தகம் வழங்கி நூலகம் அமைக்கலாம் என்று மாணவிகள் இணைந்து திட்டமிட்டு அனைத்து மாணவிகளிடமும் பணம் சேகரித்தோம். ஆனால் அந்த நேரத்தில் கஜா புயல் வீசியதால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது.

அதனால், அப்போது எங்களால் புத்தகங்களை வாங்க இயலவில்லை.  கடந்த சில நாட்களுக்கு முன் புதுக்கோட்டையில் நடந்த புத்தக திருவிழாவில் புத்தகங்களை வாங்கி வந்து பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர்களிடம் வழங்கியுள்ளோம். வழங்கப்பட்ட புத்தகங்களில் போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையிலும் அதிகமான புத்தகங்களை சேகரித்துள்ளோம்.

மேலும், இங்கே படித்துவிட்டு கல்லூரி படிப்பையும் முடித்து போட்டி தேர்வுகள் மூலம் வேலை தேடும் முன்னாள் மாணவிகளும் எங்கள் நூலகத்தில் வந்து புத்தகங்களை எடுத்து படித்து பயன்பெறலாம். இந்நிகழ்ச்சி இந்த ஆண்டோடு முடிந்துவிடாது. ஓவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினத்தில் ஆசிரியர்களை கவுரவிக்கும் விதமாக நூலகத்திற்கு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். இன்னும் சில ஆண்டுகளில் பெரிய நூலகம் உள்ள அரசு பள்ளி கீரமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி என்ற சாதனையை படைப்போம் என்றனர்.

Post a Comment

0 Comments