Title of the document

நடப்பாண்டில் 5 மற்றும் 8ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு கிடையாது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
 ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பொது தேர்வு குறித்து எந்த ஆணையையும் பிறப்பிக்கவில்லை என கூறினார். கோபிசெட்டிபாளையம் அருகே நம்பியூரில் மின்சார துணை மின் நிலைய கட்டுமான பணியை அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார். அதன் பிறகு பேசிய அவர், பொதுத்தேர்வு குறித்து துறை ரீதியான பணிகள் நடந்து வருவதாகவும், இது தொடர்பாக அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என தெரிவித்தார். மேலும் இந்த வருடம் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொது தேர்வு இல்லை எனவும் தெரிவித்தார். ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்ற விதிமுறையை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த தமிழக அரசு, தற்போது மத்திய அரசின் முடிவை ஏற்று அதற்கான பணியைத் தொடங்கியுள்ளது.மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு உடனடியாக பொதுத் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித் துறை செய்து வருவதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை தற்போது சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்க, நடுநிலை, மேல்நிலை, மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தாண்டே பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
அரசின் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பொதுத்தேர்வை இந்த ஆண்டு ரத்து செய்யாவிட்டால் வழக்கு தொடரப்படும் என்றும் நர்சரி, மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளி சங்கத்தினர் அறிவித்திருந்தனர். இந்நிலையில், 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு இந்த ஆண்டு பொதுத்தேர்வு இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post