சம்பளம் கிடைக்காமல் தவிக்கும் ஆசிரியர்கள்; கணக்கில் நீடிக்கும் மெகா குழப்பம்

Join Our KalviNews Telegram Group - Click Here
9080019831 - Add This Number In Your Whatsapp Groups - 9080019831
ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் தொடர்பாக உரிய வழிகாட்டுதல் இல்லாததால் ஒட்டுமொத்த ஆசிரியர்களும் ஜன., மாதம் சம்பளம் பெறுவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு (ஜாக்டோ ஜியோ) சார்பில் ஜன.,22 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் எச்சரித்தார். ஆனாலும் தொடர்ந்து ஏழு நாட்கள் போராட்டம் தீவிரமாக இருந்தது. 95 சதவீதம் தொடக்க பள்ளிகள் மூடப்பட்டன.

இதையடுத்து நீதிமன்றம், முதல்வர் பழனிசாமி வேண்டுகோளால் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர். சிறை தண்டனை பெற்று சஸ்பெண்ட் செய்யப்பட்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இன்னும் பணிக்கு
திரும்பவில்லை. அவர்கள் பணியாற்றிய இடங்கள் காலியிடமாக அறிவிக்கப்பட்டு, போராட்டத்தில் ஈடுபடாதவர்களுக்கு விருப்பம் அடிப்படையில் அங்கு இடமாற்ற உத்தரவு வழங்கப்பட்டு வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்வதற்காக பணிக்கு வராத நாட்கள் கணக்கெடுக்க உத்தரவிடப்பட்டது.

திருத்தப்பட்ட சம்பள பில் தயாரிப்பில் உரிய வழிகாட்டுதல் இல்லாததால் சம்பள பில்களை கருவூலத்தில் தாக்கல் செய்யும் பணியில் இழுபறி ஏற்பட்டுள்ளது. இதனால் ஒன்பது நாட்களை கடந்தும் ஆசிரியர்களுக்கு மட்டும் சம்பளம் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது.

அதிகாரிகள் கூறியதாவது: அரசு உத்தரவுப்படி நான்கு நாட்கள் மட்டுமே ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை என குறிப்பிட முடியும். ஜன.,26 குடியரசு தினத்தில் 95 சதவீத்திற்கும் மேல் ஆசிரியர்கள் கொடியேற்ற பள்ளிக்கு சென்றனர். அதுபோல் ஜன.,27 ஞாயிறு விடுமுறை. ஆனால் இந்த இரு நாட்களையும் பணிக்கு வராத நாட்களாக கணக்கிட கல்வி அதிகாரிகள் கூறுகின்றனர்.

அதுபோல் நீதிமன்றம் மற்றும் முதல்வர் வேண்டுகோளை ஏற்று ஜன.,28 பிற்பகல் பணிக்கு திரும்பிய ஆசிரியர்களுக்கு ஜன.,26 27 நாட்களில் சம்பளம் வழங்க வலியுறுத்துகின்றனர். சம்பளம்
கணக்கிடுவதில் அரசு உத்தரவை பின்பற்றுவதா அல்லது அதிகாரிகள் வாய்மொழியாக சொல்வதை பின்பற்றுவதா குழப்பமாக உள்ளது, என்றனர்.

நீதிமன்றம் தலையிடுமா?

பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூறியதாவது: 'மாணவர் நலன் பாதிக்கக்கூடாது. பணிக்கு திரும்புங்கள்' என நீதிமன்றம் அறிவுறுத்தியதை வரவேற்கிறோம். மதிக்கிறோம். அதேநேரம் அழைப்பை ஏற்று போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பிய ஆசிரியர்கள் மீது மட்டும் சம்பள பிடித்தம், பணியிடங்களை காலியாக அறிவித்தல், 'சஸ்பெண்ட்', சம்பளம் வழங்காதது உள்ளிட்ட அடுத்தடுத்து கல்வித்துறை எடுக்கும் நடவடிக்கைகளால் இன்னும் பள்ளிக்கு திரும்பவில்லை. இதையும் நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொண்டு தீர்வுகாண, ஆசிரியர்கள் நலன் காக்க முன்வர வேண்டும் என்றனர்.

Post a comment

0 Comments