ஆசிரியர்கள் வருகைப்பதிவை கண்காணிக்க செல்போன் செயலி அறிமுகம்

பள்ளிக்கு ஆசிரியர்கள் வருகையை கண்காணிக்க செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.பள்ளி மாணவர்களின் வருகையை பதிவு செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள ‘செல்போன் செயலி’ போல ஆசிரியர்களின்  வருகையை பதிவு செய்வதற்காக பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் புதிய ‘செல்போன் செயலி’ உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆசிரியர்கள் வருகைப் பதிவை தலைமை ஆசிரியர்கள் மட்டுமே பதிவு ெசய்ய வேண்டும்.  ஆசிரியர்கள் வருகைப் பதிவில் தவறுகள் இருப்பின் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர்களே முழுப் பொறுப்பு ஏற்க வேண்டிய நிலை ஏற்படும். வருகைப் பதிவு ஆப்பின் பதிவுகளை தினமும்  கண்காணிக்க அனைத்து மாவட்ட  முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், தொடக்க கல்வி கண்காணிப்பாளர்கள் அனைவரும் மாவட்டத்தில் உள்ள இஎம்ஐஎஸ் ஒருங்கிணைப்பாளர்கள் கேட்டுக் கொள்ள வேண்டும்.


ஆசிரியர்களின் வருகைப் பதிவுகளை எப்படி செய்வது என்று ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனவே அரசு  மற்றும் உதவி பெறும் பள்ளிகளிலும் அந்த முறைகளின்படி  ஆசிரியர்களின் வருகைப் பதிவை மேற்கொள்ள வேண்டும். பள்ளிக்கு வராமல் ஆன் டூட்டி போட்டுவிட்டு சொந்த வேலை பார்க்க செல்லும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களை ஸ்மார்ட் போன் மூலம் கண்காணிக்க களம்  இறங்க உள்ளது பள்ளிக் கல்வித்துறை. தற்போது பள்ளி மாணவர்களின் விவரங்கள் அனைத்தும் இஎம்ஐஎஸ் என்னும் தொகுப்பில் சேகரிக்கப்பட்டு  வருகிறது.இந்த இஎம்ஐஎஸ் சர்வர் தற்போது ‘கிளவுட்’ என்னும் அதிவேக  சர்வருடன் இணைக்கப்பட்டு, அதைப் பயன்படுத்தும் பல ‘ஆன்ராய்டு ஆப்ஸ்’கள் உருவாக்கப்பட்டுள்ளது.


அதற்கான தரவுகள் அனைத்தும் மெயின் சர்வருடன் இனிமேல் பங்கிட்டுக் கொள்ளப்படும்.
 இதைப் பயன்படுத்தித்தான் கடந்த ஆண்டில் மாணவர்களின் போட்டோக்களை அப்லோடு செய்தனர். அதைப் போல தற்போது தமிழ்நாடு ‘அட்டன்டென்ஸ் என்னும் ஆப்ஸ்’ உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளியில் பணியாற்றும்  அனைத்து ஆசிரியர்களும் இதை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதன் மூலம் மாணவர்களின் வருகைப் பதிவை பதிவு செய்யவேண்டும்.


ஆசிரியர்கள் பெயருடன் பதிவு செய்யப்படும் எண்களை கொண்டு  கண்காணிக்கப்படும் என்பதால் பள்ளிக்கு வராமலே வேறு ஒரு ஆசிரியர் போன் மூலம் வருகைப் பதிவை செய்தார்களா என்று வகைப்படுத்தப்படும். அதனால் ஆசிரியர்கள் தங்கள் வகுப்பின் மாணவர் வருகையை அவர்களே  செய்ய வேண்டும். பாடம் நடத்தும்போது ‘QR கோட் ஸ்கேன்’ செய்து பாடம் நடத்த வேண்டும்.


 ஆசிரியர்களின் எண்கள் ஏற்கனவே ‘மெயின் சர்வரில்’ இணைக்கப்பட்டுள்ளதால், ‘QR கோடு ஸ்கேன்’ செய்யாமல் பாடம் நடத்தினால் அவர் அன்று பாடம் நடத்தவில்லை என்று கணக்கிடப்படும். அதனால் பள்ளிக்கு காலை  வரும்போது 9 மணி முதல் 9.15 மணிக்குள் கைரேகை மூலம் பதிவு செய்ய வேண்டும்.


 அப்படி செய்யும்போது அந்த ஆசிரியர் எந்த இடத்தில் இருந்து பதிவு செய்கிறார் என்பதை துல்லியமாக அறிய முடியும். கைரேகை  வைக்காவிட்டால் விடுமுறை கடிதம் கொடுத்திருக்க வேண்டும். அந்த விவரங்கள் உயரதிகாரிகளுக்கு உடனுக்குடன் சென்றுவிடும். அதனால் ஆன்ராய்டு போன்கள்தான் ஆசிரியர்கள் வருகையை காட்டிக் கொடுக்கும் கருவியாக  இருக்கும்.