Title of the document

அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் 8ம் வகுப்பு வரை ‘இடைநிற்றல் இல்லாத தேர்வு முறையை தமிழக அரசு கைவிட வேண்டாம், என பொது பள்ளிகளுக்கான மாநில மேடை கோரிக்கை  வைத்துள்ளது. இதுகுறித்து பொது பள்ளிகளுக்கான மாநில மேடையின் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு வெளியிட்ட அறிக்கை: அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியரில் எட்டாம் வகுப்பு வரை பெயில் கிடையாது என்ற கொள்கையை அரசு கடைபிடித்து வருகிறது. மத்திய கல்வி ஆலோசனைக்  குழுமத்தின் 65வது கூட்டம் டெல்லியில் கடந்த 2016ம் ஆண்டு நடந்தது. அப்போது, இடைநிற்றல் இல்லாத தேர்வை ரத்து செய்யும் ஆலோசனையை  மத்திய அரசு முன்வைத்தது. 

அந்த கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன், இடைநிற்றல் இல்லாத தேர்வு முறையை தொடர தமிழ்நாடு அரசு விரும்புகிறது  என்றும் தெரிவித்தனர். இந்த ஆட்சேபணைகளை வேறு சில மாநிலங்களும் தெரிவித்த நிலையில் இடை நிற்றல் இல்லாத தேர்வு முறையை தொடர்வதா, கைவிடுவதா என்று முடிவை  எடுக்கும் உரிமை மாநில அரசுகளுக்கே வழங்கப்படும் என்று  அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அறிவித்தார். இதன் அடிப்படையில் கல்வி உரிமைச் சட்டம் திருத்தம் செய்யப்பட்டு, முடிவு எடுக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டது. 

இந்நிலையில், தொடக்க கல்வியில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு  தேர்வு நடத்த மத்திய அரசு தெரிவித்ததின் அடிப்படையில் தமிழகத்தில் அதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, மேற்கண்ட வகுப்புகளுக்கு தேர்வு நடத்தும் முறையை தமிழக அரசு கொண்டு வரும் திட்டம் அரசிடம் இருந்தால் அதை கைவிட வேண்டும். கற்றல் குறைபாட்டுக்கு மாணவர்களே பொறுப்பேற்க வேண்டும் என்பது  நியாயமற்றது. சமமான கற்றல் சூழல் அனைத்து குழந்தைகளுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று இந்திய அரசமைப்பு சட்டம், உயர்நீதி மன்றம், உச்சநீதி மன்றமும் வலியுறுத்தியுள்ளன. அதனால், 8ம் வகுப்பு வரை இடைநிற்றல் இல்லாத தேர்வு முறையை மாற்றும் முயற்சியை தமிழக அரசு கைவிட்டு, தொடக்க கல்வியை வலுப்படுத்தி, பள்ளியில் சேரும் அனைத்து மாணவர்களும் உயர்கல்வி பெற உரிய  திட்டங்களை வகுக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post