Title of the document

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களை, மாணவர்களின் நலன் கருதி மீண்டும் பணியில் சேர்க்க பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் உத்தரவிட்டுள்ளார்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 11 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள அரசு ஊழியர்கள்,  ஆசிரியர்கள் கடந்த ஜனவரி 22-ஆம் தேதி முதல் ஜனவரி 30-ஆம் தேதி வரை போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களில் 1,111 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.  அதேபோன்று மாவட்டத்துக்குள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டு... இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் ராமேஸ்வரமுருகன் மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலர்களுக்கு புதன்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
 காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
தற்போது மேல்நிலை வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வுகள் தொடங்கப்படவுள்ளதாலும், பத்தாம் வகுப்பு,  பிளஸ் 2 வகுப்புகளுக்கான அரசுப் பொதுத் தேர்வுகள் விரைவில் தொடங்கவுள்ள நிலையிலும்,  மாணவர்கள் நலன் கருதி தற்காலிகமாகப்  பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்களை மீண்டும் பணியமர்த்துவது குறித்து மறு ஆய்வு செய்து எடுக்கப்படவுள்ள ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரத்தை பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post