பள்ளிகளில் பயோ மெட்ரிக் வருகைப்பதிவு: தடை கோரியவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

Join Our KalviNews Telegram Group - Click Here
Add This Number In Your Whatsapp Groups - 8608844408

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகையை பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யும் திட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நாமக்கல்லைச் சேர்ந்த ஸ்ரீ திருப்பதி வெங்கடாசலபதி கல்வி அறக்கட்டளையின் பொருளாளர் ரஞ்சித்குமார் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வருகை புரிவதைப் பதிவு செய்யும் நோக்கத்துடன் பயோ மெட்ரிக் முறையை முழுமையாக அமல்படுத்த தமிழக பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

  கிராமப்புறங்கள் மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள பெரும்பாலான அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்குச் செல்ல போதுமான போக்குவரத்து வசதிகளோ, உள்கட்டமைப்பு வசதிகளோ இல்லை.

 இதன் காரணமாக குறித்த நேரத்தில் ஆசிரியர்களும் மாணவர்களும் பள்ளிக்கு வருவது சாத்தியமற்றது.

எனவே பள்ளிகளுக்குத் தேவையான போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளைச் செய்து கொடுக்கும் வரை இந்த பயோ மெட்ரிக் முறையை அமல்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

 அப்போது நீதிபதிகள்,  மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் சரியான நேரத்துக்குப் பணிக்கு வரவேண்டும் என்பதற்காக அரசு கொண்டு வந்துள்ள இந்த நல்ல திட்டத்துக்கு தடை விதிக்க முடியாது எனக்கூறி, இந்த வழக்கைத் தொடர்ந்த மனுதாரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Post a Comment

0 Comments