Title of the document

தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜாக்டோ - ஜியோ) சார்பில் ஜனவரி 22 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டு, இலட்சக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜாக்டோ - ஜியோ அமைப்பில் இடம் பெற்றுள்ள அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்களை உள்ளடக்கிய 7லட்சம் ஊழியர்களைக் கொண்ட 114 சங்கங்களும், 5 லட்சம் ஆசிரியர்களை உள்ளடக்கிய 51 ஆசிரியர் சங்கங்களும் காலவரையற்ற வேலை நிறுத்த அறப்போராட்டத்தை நடத்தப் போவதாக முறைப்படி அறிவித்தபோதும், தமிழக அரசு அவர்களை அழைத்துப் பேச முயற்சிக்காமல் அலட்சியப்படுத்தியது.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சட்டப் பேரவையில் 19.02.2016 அன்று வெளியிட்ட அறிவிப்பில் 7 ஆவது ஊதியக்குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும், 01.04.2003க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று உறுதி அளித்தார்.
பழைய ஓய்வூதித் திட்டத்தை செயல்படுத்துவது பற்றி ஆராய ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சாந்தா ஷீலா நாயர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்படுவதாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 26.02.2016 இல் அறிவித்தார். அரசு ஊழியர் - ஆசிரியர் சங்கங்களின் கருத்துக்களைக் கேட்டறிந்த இக்குழுவின் பதவி காலம் முடிவடைந்து மூன்று முறை அதன் பணிக்காலம் நீடிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் அக்குழுவின் தலைவர் விலகிவிட்டதால், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.எஸ்.ஸ்ரீதர் தலைமையில் இன்னொரு குழு 2017 ஆகஸ்டு 3ஆம் தேதி அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் பதவிக்காலம் நான்குமுறை நீடிக்கப்பட்டு, 27.11.2018 அன்று தனது பரிந்துரையை தமிழக அரசுக்கு அளிவித்துவிட்டது.
ஆனால் இக்குழுவின் பரிந்துரைகள் பற்றி அரசுத்தரப்பிலிருந்து இதுவரையில் எந்த முடிவும் மேற்கொள்ளவில்லை.
மத்திய அரசு 20.12.2003 தேதியிட்டு நிர்வாக ஆணை மூலமாக 01.01.2004 இல் இருந்து புதிய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்தியது. ஆனால் 2014 செப்டம்பர் 4இல் தான் இதற்கான சட்ட முன்வடிவு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, சட்டமாக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் 01.04.2003 முதல் புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டது.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்யுமாறு தொடக்கம் முதலே கடந்த 15 ஆண்டுகளாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்கள் கோரி வருகின்றன.
மேற்கு வங்கத்தில் பழைய ஓய்வூதியத் திட்டமே இன்றும் தொடருகிறது. ஆந்திர மாநில அரசும், கேரள மாநில அரசும் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே செயல்படுத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைக் கொண்ட குழுவை அமைத்துள்ளன. டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பழைய ஓய்வூதியத் திட்டத்தையே மீண்டும் செயல்படுத்தப் போவதாக 2018, நவம்பரில் அறிவித்திருக்கிறார்.
ஆனால் தமிழக அரசு இன்னும் பிடிவாதமாக மறுத்து வருவது ஏற்புடையது அல்ல. உடனடியாக பழைய ஓய்வூதியத்தைச் செயல்படுத்த எடப்பாடி பழனிச்சாமி அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
7ஆவது ஊதியக் குழு நடைமுறைப்படுத்தப்பட்டதில் உள்ள முரண்பாடுகளைக் களைதல், சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் நிர்ணயித்தல், 3500 தொடக்கப்பள்ளிகளை உயர்நிலை - மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் முடிவையும், 3500 சத்துணவு மையங்களை மூடும் முடிவையும் ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை ஜாக்டோ - ஜியோ முன் வைத்துள்ளது.
மாணவர்களுக்கு 11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அறப்போராட்டத்தில் இறங்கி உள்ளதை தமிழக அரசு உணர்ந்ததாகத் தெரியவில்லை.
ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்துவதாக கூறிக்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி அரசு, அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்வராமல், போராடும் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களை மிரட்டிப் பணிய வைக்க நினைப்பதும், அடக்குமுறையை ஏவத் துடிப்பதும் கடுமையான கண்டனத்துக்கு உரியதாகும்.
அறப்போராட்டக் களத்தில் உள்ள அரசு ஊழியர்கள் - ஆசிரியர் சங்கங்களை அழைத்துப் பேசி, அவர்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வரவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
*வைகோ*
பொதுச்செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
23.01.2019
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post