சின்னசேலம் அருகே அரசு பள்ளியில் காய்கறி சாகுபடியில் அதிக உற்பத்தி செய்து ஆசிரியர்கள், மாணவர்கள் சாதனை செய்துள்ளனர். சின்னசேலம் அருகே தெங்கியாநத்தம் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஆங்கில வழி பாடத்தில் சுமார் 120 மாணவர்களும், தமிழ்வழி பாடத்தில் 130 மாணவர்களும் படிக்கின்றனர். இந்த பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் கடந்த 4 ஆண்டு ஆண்டுகளாக 100 சதவீத தேர்ச்சி பெற்று வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தில் சுமார் ஒரு ஏக்கர் இடம் காலியாக உள்ளது.
இதையடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியர் காமராஜ் பள்ளி வளாகத்தில் காய்கறி தோட்டம் அமைக்க சுமார் 25 சென்ட் இடம் ஒதுக்கி அதில் ஆசிரியர்கள், மாணவர்களின் முயற்சியோடு வெங்காயம், கத்தரி, வெண்டை, தக்காளி, அவரை உள்ளிட்ட காய்கறி செடிகளை நட்டு பாதுகாத்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன் தோட்டத்தில் சுமார் 400 கிலோ வெங்காயம் அறுவடை செய்துள்ளனர். அவ்வாறு அறுவடை செய்த வெங்காயத்தை கள்ளக்குறிச்சி மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகா மாணவர்களுக்கு பகிர்ந்து வழங்கினார்.
மேலும் தோட்ட பயிர் வளர்ப்பில் மாணவர், ஆசிரியர்களின் ஈடுபாட்டை பாராட்டினார். அப்போது மாணவர்கள் பிளாஸ்டிக் தடை அமலில் உள்ளதால் துணிப்பையை எடுத்து வந்து வாங்கி சென்றனர். அதைப்போல தோட்டத்தில் விளைந்த காய்கறிகளையும் மாணவர்களும், ஆசிரியர்களுக்கும் தலைமை ஆசிரியர் வழங்கினார். இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் காமராஜ் கூறும்போது தற்போது விவசாயம் அழிந்து வருகிறது. ஆகையால் மாணவர்களுக்கு படிக்கும்போதே விவசாயத்தில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் தோட்ட பயிர்கள் பயிரிடப்படுகிறது. மாணவர்களும் கல்வியோடு விவசாயத்திலும் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்று கூறினார்
Post a Comment