Title of the document
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், அறிவொளியின், வீடு,அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று சோதனை நடத்தினர்.

சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள, டி.பி.ஐ., வளாகத்தில், பள்ளி கல்வித் துறையின் கீழ், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அதன் இயக்குனராக, அறிவொளி, 55, பணியாற்றி வருகிறார். இதற்கு முன், அவர், பொது நுாலக துறை இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார்.

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், புதிய பாடத்திட்டங்களை உருவாக்குதல், எளிய முறையில், மாணவர் களுக்கு பாடம் கற்பிப்பது எப்படி என்பது குறித்த ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு வருகிறது. அதற்காக, பல்வேறு திட்டங்கள் தயாரிக்கப் பட்டு, அரசின் சார்பில் நிதி ஒதுக்கீடும் செய்யப் படுகிறது.

அந்த நிதியில், அறிவொளி உள்ளிட்ட சில அதிகாரிகள், முறைகேடு செய்து இருப்பதாக, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, சென்னை, கோபாலபுரத்தில் உள்ள, அறிவொளியின் வீட்டில்,எட்டு மணி நேரம், லஞ்ச ஒழிப்பு போலீசார், அதிரடி சோதனை நடத்தினர்.

அதேபோல, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திலும், பல மணி நேரம் சோதனை நடந்தது. அறிவொளி மற்றும் அவரது அலுவலக ஊழியர்களிடமும், லஞ்ச ஒழிப்பு போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அவர்களிடம் இருந்து, பல முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றி உள்ளனர்.

அதேபோல, அறிவொளி வீட்டிலும், சொத்து ஆவணங்களும் சிக்கி உள்ளன. 'கம்ப்யூட்டர், பென் டிரைவ்' உள்ளிட்ட பொருட்களையும், கைப்பற்றி உள்ளனர்.

இது குறித்து, லஞ்ச ஒழிப்பு துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது: வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்துள்ள தமிழர்களின் வாரிசுகள், தமிழ் மொழியை எளிதாக கற்றுக்கொள்ள, மாநில கல்வி யியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், 'உலக மெல்லாம் தமிழ்' என்ற திட்டத்தை செயல்படுத்துகிறது.

இந்த திட்டத்தில், 'ஆடியோ, வீடியோ' தயாரித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டதில், முறை கேடு நடந்து இருப்பது, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.ரூ.பல கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதற்கு முகாந்திரம் இருப்பதால், அறிவொளி மற்றும் அவருடன் பணியாற்றி வந்த சிலரிடம், தொடர்ந்து விசாரித்து வருகிறோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

ஐந்து பேர் மீது வழக்கு

அறிவொளி மட்டுமின்றி, முறைசாரா கல்வி நிறுவனத்தின் இயக்குனர், லதா, உதவி பேராசிரியை, சங்கீதா, பட்டதாரி ஆசிரியை, சித்ரா, இடைநிலை ஆசிரியர், அமலன் ஜெரோம் ஆகியோரும், லஞ்ச புகாரில் சிக்கி உள்ளனர். இவர்களின் வீடுகளிலும், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி உள்ளனர். ஐந்து பேர் மீதும், வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post