Title of the document


அடக்குமுறை

“மக்கள் எதற்காகப் போராடினாலும் போலீசு அடக்குமுறைதான்
 தீர்வா? விடக்கூடாது ! அரசின் அநீதிக்கு எதிரான ஜாக்டோ ஜியோ போராட்டம் வெல்லட்டும் !
அனைவரும் ஆதரிப்போம்!”
ஜாக்டோ ஜியோ போராட்டத்தை அடக்கி ஒடுக்கி போராடுபவர்களை அச்சுறுத்தும் விதமாக மாவட்டந்தோறும் போராட்டத்தில் ஈடுபட்ட முக்கிய நிர்வாகிகளை தனிமைப்படுத்தி கைது செய்து சிறையலடைப்பதை, மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.
ஜாக்டோ – ஜியோ போராட்டம்
தனியார் பள்ளியில் 15 ஆயிரம் கொடுத்து கசக்கி பிழிவதை எதிர்த்து போராடாமல், அரசு ஊழியர்களை அவ்வாறு வேலை செய்யச் சொல்வது சரியல்ல. அரசு ஊழியர்கள் அநியாயமாக அதிக சம்பளம் கேட்கிறார்கள் என பொய் பிரச்சாரம் செய்து மக்களிடம் எதிர் கருத்தை உருவாக்க முயற்சிக்கும், எடப்பாடி அரசின் சதித்தனத்தை முறியடிக்க வேண்டும். மக்கள் எதற்காக போராடினாலும் போலீசு அடக்குமுறைதான் தீர்வு என்பதுதான் எடப்பாடி அரசின் அணுகுமுறை. கோரிக்கையின் நியாயத்தை பற்றி பேச எடப்பாடி மாபியா கும்பலுக்கு எந்த அருகதையும் இல்லை.
கடந்த சட்ட மன்றத் தேர்தலில் “புரட்சித்தலைவி அம்மா” கொடுத்த வாக்குறுதியை, தமிழக அரசு தற்போது உயர் நீதிமன்றத்தில் நிறைவேற்றுகிறோம் என ஒத்துக்கொண்ட கோரிக்கைகளை  சொன்னபடி நிறைவேற்று என கேட்கிறார்கள். போராடுபவர்களை அழைத்து பேசாமல் அவர்களை நயவஞ்சகமாக ஏமாற்றி ஒடுக்க முயல்கிறது எடப்பாடி அரசு.
படிக்க:
♦ அ.தி.மு.க அரசுக்கு அஞ்சாமல் போராடும் போக்குவரத்து தொழிலாளிகள் – நேரடி ரிப்போர்ட்
♦ செவிலியர்களின் போராட்ட உரிமையைப் பறித்த நீதிமன்ற பயங்கரவாதம் !
பல லட்சம் அரசு ஊழியர்களின் போராட்டத்தை எளிதாக அடக்கி ஒடுக்க முயலும் எடப்பாடி அரசுதான் எட்டு வழிச்சாலை, ஸ்டெர்லைட் ஆலை, ஹைட்ரோ கார்பன் திட்டங்களை எதிர்த்து போராடும் மக்களை ஒடுக்கி வருகிறது. இத்தகைய அரசு ஒடுக்குமுறை என்ற பொது எதிரிக்கு எதிராக ஜாக்டோ ஜியோ ஊழியர்களின் போராட்டத்தை அனைவரும் ஆதரித்து பங்கேற்க வேண்டும்.
ஆயிரக்கணக்கான அரசு பள்ளிகளை மூடுவது, அங்கன்வாடிகளை மூடுவது, காலி பணியிடங்களை நிரப்பாமல் இருப்பது, அத்துக்கூலிக்கு கொத்தடிமைகளாக ஆள் சேர்ப்பது, ஓய்வூதிய பணத்தை கொள்ளையடிப்பது போன்ற அனைத்தும் இப்போது பணியில் இருப்பவர்களின் கோரிக்கை மட்டுமல்ல. அனைத்து மக்களுக்குமான கோரிக்கை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்
தொடரும்  ஜாக்டோ ஜியோ போராட்டத்தால் அரசு நிறுவனங்கள், அரசு பள்ளிகள் ஸ்தம்பித்து போய் உள்ளது. மக்கள் பாதிக்கப்படுவதற்கு எடப்பாடி அரசின் ஆணவம்தான் காரணம். போராடும் ஊழியர்கள் காரணமல்ல. கோரிக்கையை பற்றி போராடுபவர்களை அழைத்து பேசி பரிசீலிப்பதுதான் பிரச்சினைகளை நிரந்தரமாக தீர்க்கும். குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல் செய்தால் போக்குவரத்து தடைபட்டு மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். குற்றவாளி யார் ? குடி நீர் கொடுக்க தவறிய அதிகாரிகளா? பாதிக்கப்பட்டு வெயிலில் போராடும் மக்களா?
அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் சம்பளப் பணத்தை பிடித்து ஓய்வூதிய பலன்களை தராமல் சுமார் பல ஆயிரம் கோடி களவாடி விட்டார்கள். எட்டு வழிச்சாலைக்கு நிலத்தை அநியாயமாக விவசாயிகளிடமிருந்து பறிக்கிறார்கள். டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்தி பாலைவனமாக்க துடிக்கிறார்கள். 13 பேரை சுட்டு கொலை செய்துவிட்டு ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க சதி செய்கிறார்கள். மேலும் பேச்சுரிமை கருத்து சுதந்திரம் அனைத்தையும் பறிக்கிறார்கள். இவ்வாறு மோடி அரசின் கூலிப்படையாக செயல்படும் எடப்பாடி அரசு. ஜாக்டோ ஜியோ ஊழியர்களின் போராட்டத்தின் மீது நடத்திவரும் அடக்குமுறைகளை அனைவரும் எதிர்த்துப் போராட வேண்டும்.
மக்கள் அதிகாரம்
வழக்கறிஞர்.சி.ராஜு
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்.
26-1-2019
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post