Title of the document

பள்ளிகளில் ஆண்ட்ராய்டு செல்போன் மூலம் மாணவர்கள் வருகை, சத்துணவு உள்ளிட்ட விபரங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. ஆனால் மென்பொருளின் மெதுவான செயல்பாடினால் இவற்றை குறித்த நேரத்திற்குள் அனுப்ப முடியாமல் ஆசிரியர்கள் பரிதவித்து வருகின்றனர்.பள்ளிக்கல்வித்துறையில் மாணவர்களின் வருகை உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் ஆண்ட்ராய்டு போன் மூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதற்கென வடிவமைக்கப்பட்ட மென்பொருள் மூலம் ஆசிரியர்கள் இவற்றை பதிவு செய்து வருகின்றனர். காலையில் 9.30 மற்றும் மதியம் 1.30க்கும் மாணவர்களின் வருகை, விடுமுறை உள்ளிட்ட விபரங்கள் இதன்மூலம் அனுப்பப்படுகின்றன. இதேபோல் காலை 11 மணிக்கு சத்துணவு மாணவர்களுக்கான பட்டியல்கள் தலைமையாசிரியர் மூலம் அனுப்ப வேண்டும்.
இந்த மென்பொருள் அவ்வப்போது மேம்படுத்தப்பட்டு வருகிறது. எனவே இரண்டு, மூன்று நாட்களுக்கு ஒருமுறை இந்த இவற்றை அழித்து விட்டு மீண்டும் பதிவிறக்கம் செய்ய வேண்டும். இணைய துண்டிப்பு, மெதுவான செயல்பாடுகளின் போது இவற்றை அனுப்புவதில் ஆசிரியர்களுக்கு பெரும் சிரமம் இருந்து வருகிறது. குறிப்பிட்ட நேரத்திற்குள் அனுப்பாவிட்டால் இதுகுறித்த விசாரணை துவங்கிவிடுவதால் கல்வி போதிப்பதில் கவனம் செலுத்த முடியவில்லை என்று ஆசிரியர்கள் பரிதவித்து வருகின்றனர்.



இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘‘ஏற்கனவே பல்வேறு பதிவேடுகளை பராமரித்து வருகிறோம். தற்போது ஆண்ட்ராய்டு மூலம் மேலும் பல பதிவுகளை மேற்கொள்ள வேண்டியதுள்ளது. இணையவேகம் குறைவு போன்ற தருணங்களில் மிகவும் சிரமப்பட வேண்டியதுள்ளது. அனுப்பிய பதிவுகளுக்கு டெய்லி ரிப்போர்ட் வருவதில்லை. அதனால் நாம் அனுப்பியது சரியாக பதிவாகி உள்ளதா, இல்லையா என்பதை உணர முடியவில்லை.தலைமையாசிரியர் விடுமுறை எடுத்தால் உதவி தலைமையாசிரியர் மூலம் அனுப்பப்படும் விபரங்கள் செல்வதில்லை. இதனால் உடல்நலம் குன்றி விடுப்பில் இருக்கும் தலைமையாசிரியர்களை இதற்காக தொந்தரவு செய்ய வேண்டியதுள்ளது.சத்துணவு தகவல் விபரம் சென்றடையாவிட்டாலும் ஆசிரியர்களுக்கு நேரடியாக தொடர்பு கொண்டு நச்சரிக்கின்றனர். இதனால் வகுப்பறையில் கவனம் செலுத்த முடியவில்லை. சத்துணவு என்பது தனி துறை. எனவே அதற்கென உள்ள அலுவலர்கள் மூலம் இப்பணியை மேற்கொள்ளலாம். தொழில்நுட்பம் வேலையின் சிரமத்தை குறைப்பதாக இருக்க வேண்டும். ஆனால் இதில் மேலும் பணிச்சுமையே அதிகரித்துள்ளது. மனஉளைச்சலாகவும் உள்ளது. எனவே இந்த தொழில்நுட்பங்களை முறைப்படுத்தி மேம்படுத்த வேண்டும்’’ என்றனர்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post