“காவல் துறை, கல்வித் துறை அதிகாரிகளின் அதிகார மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம்; நியாயம் கிடைக்கும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும்” என்று கூறி, 5ஆவது நாளாகத் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர் ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள்.
நேற்று (ஜனவரி 25) இரவு அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் விரட்டிப் பிடித்து, பெரும் பதற்றத்தையும் கொந்தளிப்பையும் போலீசார் உருவாக்கியதாகக் குற்றம்சாட்டியுள்ளனர் ஜாக்டோ ஜியோ போராட்டக் குழுவினர். இதனைத் தொடர்ந்து, இன்று 5ஆவது நாளாக ஜாக்டோ ஜியோவினர் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இன்று குடியரசு தினவிழா என்பதால், தமிழக அரசுப் பள்ளிகளில் கொடியேற்றப்படுமா என்ற கேள்வி, ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் இருந்து வந்தது.
இந்த நிலையில், தமிழகமெங்கும் பல இடங்களில் பள்ளிகளுக்குச் சென்று தேசப்பற்றுடன் கொடியை ஏற்றி வணக்கம் செலுத்திவிட்டு, அங்கிருந்து வெளியேறியுள்ளனர் ஆசிரியர்கள். அதேநேரத்தில், மாவட்டத் தலைநகரங்களில் ஆட்சியர் கொடியேற்றும் நிகழ்ச்சிகளில் பெரிய அளவில் மாணவர்கள் கூட்டம் இல்லாமல் களையிழந்து காணப்பட்டது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகாவில் உள்ள அரசுத் துவக்கப் பள்ளியொன்றில் கொடியேற்றிவிட்டு வந்த ஆசிரியை ஒருவரிடம் பேசினோம். சோகமாக நடந்து வந்தவர், மாணவர்களுக்காகக் கொடியேற்றினோம் என்று நம்மிடம் தெரிவித்தார். “எங்கள் மாணவர்கள் புரிந்துகொள்ளும் அளவுக்குக்கூட முதல்வர் புரிந்துகொள்ளவில்லையே” என்று கூறினார்.
“அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சம்பளம் உயர்த்திக் கேட்கிறார்கள். அவர்கள் வாங்கும் சம்பளம் போதாதா என்று சிலர் பிரச்சாரம் செய்கிறார்கள். நாங்கள் ஊதிய உயர்வு கேட்கவில்லை.எங்கள் ஊதியத்திலிருந்து 10% சி.பி.எஸ். பிடிக்கிறார்கள். 2008ஆம் ஆண்டிலிருந்து இதுவரையிலான பத்து வருடங்களில் எனக்கு 7 லட்சம் ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து அரசு ஊழியர்களுக்கும் இப்படிப் பிடித்தம் செய்யப்பட்ட ஆயிரம் கோடியளவிலான பணம் எங்கிருக்கிறது என்று தெரியவில்லை. கருவூலக் கணக்கிலும் இல்லை என்கிறார்கள். இதைக் கேட்பதில் என்ன தவறு?” என்று கேள்வி எழுப்பினார்.
அதேபோல, 2008ஆம் ஆண்டுக்கு முன்பும் பின்பும் இடை நிலை ஆசிரியராகச் சேர்ந்தவர்களுக்கு சுமார் 6,000 ரூபாய் ஊதிய வித்தியாசம் உள்ளது. இதற்கு எதிராகவும் தாங்கள் போராடுவதாகக் கூறினார் அந்த ஆசிரியை. “நான் எம்.எஸ்.சி படித்து இடை நிலை ஆசிரியராக இருக்கிறேன். என்னை எல்கேஜிக்கு வகுப்பு எடுக்க ஆர்டர் போட்டுள்ளனர். பி.டி.ஒ. கட்டுப்பாட்டில் உள்ள பால்வாடி குழந்தைகளுக்கு வகுப்பு எடுக்கப் போனால், பிறகு கல்வித்துறை ஊதியம் கொடுக்காது. பிடிஓ தான் சம்பளம் கொடுப்பார். இதனால் ஊதியம் குறையும்” என்று அவர் வருத்தத்துடன் கூறினார்.
ஜாக்டோ ஜியோ போராட்டத்தை விமர்சிக்கும் மக்களும், முதல்வர் உள்ளிட்ட தமிழக அரசில் அங்கம் வகிப்பவர்களும் தங்களது கோரிக்கைகளைப் புரிந்துகொள்ள வேண்டுமென்பதே அந்த ஆசிரியையின் விருப்பம். போராட்டக் களத்தில் இருப்பவர்களின் கோஷங்களும் இதையே பிரதிபலிக்கின்றன.
Post a Comment