Title of the document


திருப்பத்தூரில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் சாதுவான ஆசிரியர் ஒருவரை, ப்ளஸ் டூ படிக்கும் மாணவர்கள் அசிங்கப்படுத்திக் கொடுமைப்படுத்தும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

வகுப்பறைக்கு வரும் மாணவர்கள்
வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அரசு மருத்துவமனை அருகில் மிகப் பழைமையான ஸ்ரீ ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. காமராஜர், முதல்வராக இருந்தபோது இப்பள்ளியை திறந்து வைத்துள்ளார். வேலூர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த குறிப்பிடத்தக்கப் பிரமுகர்கள் பலர், இப்பள்ளியில்தான் படித்துள்ளனர். பல்வேறு பெருமைகளுக்குரிய இப்பள்ளி, தற்போது எதிர்மறை சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளியில் 800-க்கும் அதிகமான மாணவர்கள் படிக்கிறார்கள். இங்கு, ப்ளஸ் டூ வகுப்புக்குப் பாடம் எடுக்கும் வடமலை என்ற எக்னாமிக்ஸ் ஆசிரியர் 12 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். சாதுவான ஆசிரியர் என்று கூறப்படுகிறது. இந்த ஆசிரியரை, ப்ளஸ் டூ மாணவர்கள் அடிக்காத குறைதான். மற்ற வகையில் ஆசிரியர் என்றுகூட மதிக்காமல் மாணவர்கள் சிலர் கொடுமைப்படுத்துவதாகப் புகார் கூறப்படுகிறது. ஆசிரியரும் கண்டிப்பதற்கு தயக்கப்பட்டுக் கொண்டு, தலைமை ஆசிரியர் ஆர்.பாபுவிடம், மாணவர்களின் சேட்டையைப் பற்றி எடுத்துக் கூறினால் தலைமை ஆசிரியர் கண்டுகொள்வதில்லையாம்.

ஆசிரியரை அவமானப்படுத்தும் மாணவர்கள்

இதுபோன்ற தொடர் அலட்சியத்தால், அந்த ஆசிரியருக்கு மட்டுமன்றி ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளியில் பணியாற்றி வரும் அத்தனை ஆசிரியர்களுக்கும் சில மாணவர்களால் பாதுகாப்பில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் அனைவரும் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் என்பதால், சாதி ரீதியான போக்கு அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், தவறிழைக்கும் மாணவர்களைக் கண்டிக்க முடியவில்லை. எக்னாமிக்ஸ் ஆசிரியர் வடமலையிடம், ப்ளஸ் டூ மாணவர்கள் ரகளையில் ஈடுபடுவதைப்போல் சமீபத்தில் ஏகப்பட்ட டப்ஸ்மேஷ் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவின. வீடியோவில், மாணவர்கள் சிலர், சீருடை அணியாமல் வகுப்பறைக்குள் சுற்றித்திரிகிறார்கள்.

வகுப்பறையில் அநாகரீகமாக நடக்கும் மாணவர்கள்
இன்னும் சில மாணவர்கள் சட்டையை அவிழ்த்து தலைப்பாகையாக சுற்றிக்கொண்டு மேஜையில் உட்கார்ந்திருக்கிறார்கள். டப்ஸ்மேஷ் வீடியோவில் பாடல்களை ஒலிபரப்பி, மாணவர்கள் ‘‘ரவுடிகளைப் போல் பந்தா செய்துகொண்டு ஆசிரியர் வடமலையிடம் வம்பிழுக்கிறார்கள். இன்னும் நிறைய சேட்டைகளைச் செய்தபடி வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் அந்த மாணவர்களே பதிவிட்டுள்ளனர். ப்ளஸ் ஒன் மற்றும் ப்ளஸ் டூ படிக்கும் மாணவர்கள் பலர் சீருடை அணியாமல், தலைமுடியைப் பல்வேறு ஸ்டைல்களில் வைத்துக்கொண்டும் பள்ளிக்கு வருகிறார்கள். செல்போன் பயன்படுத்தக் கூடாது என்றால் மிரட்டுகிறார்கள். இதுசம்பந்தமாக, கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் கண்டுகொள்வில்லை. மாணவர்களின் எதிர்காலத்தை நினைத்து போலீஸில் புகார் தரவில்லை’’ என்கிறார்கள் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள்.
 
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post