விதிகளை மீறி நடத்தப்பட்ட தனியார் மையங்களில் படித்தவர்களுக்கு, கோவை பாரதியார் பல்கலையின் பட்ட சான்றிதழ்கள் ரத்தாகலாம் என, தகவல்கள் வெளியாகி உள்ளன.
கோவை பாரதியார் பல்கலை சார்பில், 300க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள், வெளி மாநிலங்களில் படிப்பு மையங்கள் நடத்த, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அவற்றில், பகுதி நேரமாகவும், வார இறுதியிலும் வகுப்புகள் நடத்தி, அதற்கு, 'ரெகுலர்' மாணவர்களுக்கான பட்ட சான்றிதழை, பாரதியார் பல்கலை வழங்குகிறது.கடும் எதிர்ப்புஇந்த நடவடிக்கைக்கு, பல்கலையின் இணைப்பு கல்லுாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
யு.ஜி.சி., விதிப்படி, உள்கட்டமைப்பு வசதியுடனும், தரமான ஆசிரியர்களால் நடத்தப்படும், கலை, அறிவியல் கல்லுாரிகளில் மட்டுமே, ரெகுலர் பட்ட படிப்புகள் நடத்த முடியும்.மேலும், ஒவ்வொரு பல்கலையும், அந்தந்த மாநிலங்களுக்குள் மட்டுமே, படிப்பு மையம் அமைக்கலாம்.அதை, தனியாரிடம் விடக் கூடாது.
'ரெகுலர்'வகுப்புகள் நடத்தக் கூடாது; தொலைநிலை கல்வி மட்டுமே நடத்தலாம் என, கட்டுப்பாடுகள் உள்ளன.
இதையும், பாரதியார் பல்கலை பின்பற்றவில்லை என்ற,குற்றச்சாட்டு எழுந்தது.இதுகுறித்து, தனியார் கல்லுாரிகள் தரப்பில், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் போது, 'இனி, தனியார் படிப்பு மையங்களை அனுமதிக்க மாட்டோம்' என, பல்கலை நிர்வாகம் உறுதி அளித்திருந்தது.
ஆனால், பாரதியார் பல்கலையின் சிண்டிகேட் கூட்டம், சென்னை தலைமை செயலகத்தில், உயர்கல்வி செயலர் மங்கத்ராம் சர்மா தலைமையில், நவம்பர், 28ல் நடந்தது. இதில், 165 தனியார் படிப்பு மையங்களுக்கு, மீண்டும் அனுமதி அளிக்க முடிவானது.
இதுகுறித்து, நமது நாளிதழில், நவ., 29ல் விரிவான செய்தி வெளியானது. உடன், கல்லுாரிகள் தரப்பில், பாரதியார் பல்கலை மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. வழக்கை நீதிமன்றம் விசாரித்து, ஜன., 7ல், சிண்டிகேட் உறுப்பினர்கள், பல்கலை நிர்வாகிகள் நேரில் ஆஜராக உத்தர விட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் வழக்கு விசாரணைக்கு வந்த போது, உயர்கல்வி செயலர் மங்கத்ராம் ஷர்மா, உயர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. எனவே, அவரை கைது செய்து ஆஜர்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த பிரச்னை, பாரதி யார் பல்கலைக்கும், உயர்கல்வி துறையின் அலட்சியமான நிர்வாகத்துக்கும், பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.பேராசிரியர்கள் முடிவுஇந்நிலையில், இரண்டு ஆண்டுகளாக நீடிக்கும் தனியார் படிப்பு மையம் தொடர்பான, இந்தபிரச்னைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
யு.ஜி.சி., விதியை மீறிய படிப்பு மையங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும், அவற்றின் வழியாக வழங்கப்பட்ட பட்டப்படிப்பு சான்றிதழ்களை ரத்து செய்யவும், கவர்னருக்கும், யு.ஜி.சி.,க்கும் புகார் அனுப்ப, பேராசிரியர்கள் முடிவு செய்து உள்ளனர்.இதனால், படிப்பு மையங்களுக்கு, மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது
Post a Comment