Title of the document


பொதுத்தேர்வு நெருங்குவதால், 'நீட்' பயிற்சிக்கு அரசு பள்ளி மாணவர்கள், 'குட் பை' கூறி விட்டனர்.மருத்துவ பட்டப்படிப்பில் சேர, 'நீட்' தேர்வில் வெற்றி பெற வேண்டும். ஐ.ஐ.டி., உள்ளிட்ட தொழில்நுட்ப கல்லுாரியில் சேர, ஜே.இ.இ., தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்களும், மெட்ரிக் பள்ளி மாணவர்களும், இவற்றில் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெறுகின்றனர்.

அரசு பள்ளி மாணவர்களை இதில் அதிக அளவில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்னும் நோக்கில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், நாட்டின் முன்னணி பயிற்சி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. பல கோடி ரூபாய் செலவழித்து அந்த நிறுவனங்கள் இரு ஆண்டுகளாக பயிற்சி அளிக்கின்றன.அன்னுார் வட்டாரத்தில், அன்னுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

அன்னுார் வட்டாரத்திலுள்ள ஐந்து அரசு மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த, 156 பேர் நீட் மற்றும் ஜேஇஇ பயிற்சிக்கு சேர்ந்தனர்.துவக்கத்தில், 70 முதல் 80 சதவீத மாணவ, மாணவியர் பயிற்சிக்கு வந்தனர். நாளடைவில் ஒற்றை இலக்கத்தில் மட்டும் மாணவர்கள் வந்தனர். இம்மையத்தில், சாடிலைட் லிங்க் பெறப்படவில்லை. நேரடியாக மட்டும் கற்பிக்கப்பட்டது.மேலும் மார்ச் 1ம் தேதி பொதுத் தேர்வு துவங்குகிறது. பிப்., 6ல் செய்முறை தேர்வு துவங்குகிறது. இதற்கு தயாராக வேண்டி உள்ளதால், மாணவர்கள், அரை ஆண்டு தேர்வுக்கு பிறகு நீட் பயிற்சி வகுப்புகளுக்கு வரவில்லை.கடந்த வாரத்தில் நான்கு நாட்களும் கற்பிக்கும் ஆசிரியர்கள் பயிற்சி மையத்திற்கு வந்து மாலை வரை காத்திருந்து, மாணவர்கள் வராததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.பிளஸ் 2 மாணவர்கள் கூறுகையில்,

 'இனி பொது தேர்வுக்கு படிக்க வேண்டி உள்ளதால் நீட் பயிற்சிக்கு செல்ல மாட்டோம். பொதுத்தேர்வு முடிந்த பின் நீட் தேர்வுக்கு ஒரு மாதம் அவகாசம் உள்ளது. அப்போது நீட் தேர்வுக்கு பயிற்சி பெறலாம் என உள்ளோம்' என்றனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post