அங்கன்வாடி மையங்களில் தொடங்கியுள்ள எல்கேஜி படிப்பு இலவசமா? என்பது குறித்து உரிய அறிவிப்பு வெளியாகாததால் பெற்றோர் குழப்பத்தில் உள்ளனர். இதேபோல் அங்கன்வாடி மையங்களுக்கு பணிமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் தகுதி இழக்கப்போவதாக குற்றம் சாட்டுகின்றனர்.
தமிழகத்தில் உள்ள 2,381அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்தது. தொடக்கப்பள்ளிகளில் உபரியாக உள்ள இடைநிலைஆசிரியர்கள், எல்.கே.ஜி. வகுப்புகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
கோவை மாவட்டத்தில் 122 அங்கன்வாடி மையங்களில் இன்று முதல் (ஜன. 21) எல்.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. 18-ம் தேதி முதல் இம்மையங்களில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. சுமார் 2,748 குழந்தைகள் சேர்க்கப்பட உள்ளனர்.
இவர்களுக்கு வகுப்பெடுக்க 122 இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அங்கன்வாடி மையங்களில் தொடங்கப்பட்டுள்ள எல்கேஜி படிப்பு இலவசமா? அல்லது கட்டணம் செலுத்த வேண்டுமா? என்று பெற்றோர் குழப்பமடைந்துள்ளனர்.
தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச்சங்கத் தலைவர் எஸ்.ஏ. ராஜ்குமார், கோவை ராஜவீதி துணிவணிகர் சங்க அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில வழிக் கல்விக்கு வசூலிக்கப்படும் கட்டண விவரங்கள் குறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார்.
அப்பள்ளி தலைமை ஆசிரியை ஆர்.மணியரசி, 'ஆங்கில வழிக்கல்விக்கு 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை கல்விக் கட்டணமாக ரூ.200 மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிதியாக ரூ.50, 9 மற்றும் 10- வகுப்புகளுக்கு ரூ.250 மற்றும் ரூ.50, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு ரூ.500, கணினி கட்டணம் ரூ.200 மற்றும் ரூ.50 அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டுமே ஆண்டுதோறும் வசூலிக்கப்படுகிறது. வேறெந்த கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை' என்ற விளக்கம் அளித்திருந்தார்.
அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்விக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதால், அங்கன்வாடிமையத்தில் தொடங்கப்பட்டுள்ள எல்கேஜி வகுப்புக்கும் கட்டணம்செலுத்த வேண்டுமா? என்றுபெற்றோர் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து அரசு தரப்பில் எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்று தெரிவிக்கின்றனர்.
காரணம் தனியார் பள்ளிகளில் மற்ற வகுப்புகளைக் காட்டிலும், மழலையர் வகுப்புகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகின்றன. இதேபோல் அங்கன்வாடி மையங்களிலும் வசூலிக்கப்படுமா? என்று குழப்பத்தில் உள்ளனர் பெற்றோர்.
இது குறித்து எஸ்.ஏ.ராஜ்குமார் கூறும்போது, 'இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் இலவசமாக அளிக்க வேண்டிய கல்விக்கு, ஆங்கில வழிக்கல்வி என காரணம் காட்டி கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு மறைமுகக் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. இப்பிரச்சினையில் கல்வித்துறையினர் தலையிட்டு, உரிய தீர்வு காண வேண்டும். மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்' என்றார்.
தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு மறைமுகக் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. இப்பிரச்சினையில் கல்வித்துறையினர் தலையிட்டு, உரிய தீர்வு காண வேண்டும். மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்' என்றார்.
Post a Comment