அரசுப் பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்பு வரை படித்து வரும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் முப்பருவ முறை புத்தகம் அடுத்த ஆண்டு முதல் 9ம் வகுப்புக்கு கிடையாது என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2010ம் ஆண்டில் அனைத்து கல்வி வாரியங்களும் கலைக்கப்பட்டு பொதுக்கல்வி வாரியம் கொண்டு வரப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சமச்சீர் கல்வி முறையும் கொண்டு வரப்பட்டது.
பின்னர் அரசுப் பள்ளிகளில் முப்பருவ முறை அறிவிக்கப்பட்டு, தொடக்கத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரை இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு வகுப்புக்கும் முப்பருவ முறை கொண்டு வரப்படும் என்று அரசு அறிவித்தது. இதன்படி 2011ம் ஆண்டு முதல் முப்பருவ முறை வந்தது. அதற்காக ஒவ்வொரு பருவத்துக்கும் தனித்தனியாக புத்தகம் அச்சிட்டு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த திட்டம் 9ம் வகுப்பு வரை செயல்படுகிறது. ஆண்டுதோறும் மாவட்ட வாரியாக அனைத்து பள்ளிகளுக்கும் முப்பருவ புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் கழகம் அச்சிட்டு வழங்கி வருகிறது.
இந்த புத்தகங்களை பெறுவதற்காக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், தங்கள் மாவட்டத்தில் செயல்படும் பள்ளிகள் எண்ணிக்கை மாணவர்கள் எண்ணிக்கை, தேவைப்படும் புத்தகங்களின் எண்ணிக்கை ஆகியவற்றை பட்டியலிட்டு பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்ப வேண்டும். இந்த ஆண்டுக்கான முப்பருவ முறைப் புத்தகம் தற்போது சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், சில மாற்றங்களை செய்து பள்ளிக் கல்வித்றை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 9ம் வகுப்புக்கான பாடப்புத்தகங்கள் முப்பருவ முறையின் கீழ் 3 பருவமாக வழங்குவதற்கு பதிலாக ஒரே புத்தகமாக தயாரித்து வழங்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதனால், 9ம் வகுப்புக்கான புத்தகங்கள் தேவைப் பட்டியலை தயாரிக்கும் போது, 9ம் வகுப்புக்கான முப்பருவ புத்தகங்கள் குறித்த இருப்பு நிலை குறிப்பிடத் தேவையில்லை என்றும், 2019-2020ம் ஆண்டுக்கான தேவைப்பட்டியலை மட்டும் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான சுற்றறிக்கை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன்படி அடுத்தஆண்டு முதல் 9ம் வகுப்புக்கு முப்பருவ புத்தகம் கிடையாது. ஒரே புத்தகம்தான் அச்சிடப்பட உள்ளன.
Post a Comment