Title of the document

தமிழகத்தில் 3,500 தொடக்கப் பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளுடன் இணைக்கும் முடிவை அரசு கைவிட வலியுறுத்தி சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வரின் தனிப்பிரிவில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நேரில் மனு அளித்தனர். 

மேலும் பள்ளிக் கல்வித் துறைச் செயலர் பிரதீப் யாதவ், பள்ளிக் கல்வி- தொடக்கக் கல்வி இயக்குநர்கள் ஆகியோரிடமும் இந்த கோரிக்கை மனுவை அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: 

தமிழகத்தில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் 3,500 தொடக்கப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைப்பது என தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்ததாகத் தெரிகிறது. இதன் மூலம் அங்கு செயல்பட்டு வரும் 3,500 சத்துணவுக் கூடங்களும் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

அரசின் இந்த முடிவால் 3,500 தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், அங்கு பணியாற்றும் சமையலர்கள், முற்றிலுமாக முடங்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும் தலைமை ஆசிரியர்கள் பதவியிலிருந்து பணி இறக்கம் செய்யப்பட்டு பணிப் பாதுகாப்பு, ஊதியப் பாதுகாப்பு இல்லாமல் போகும். 

முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் தொடக்கக் கல்வித் துறையை தனித்தனியாகப் பிரித்து தனி அலுவலர்களை நியமித்து அதிகாரப் பகிர்வுக்கு வழி வகுத்தார். 
ஆனால் தற்போதைய பள்ளிக் கல்வித்துறை, நிர்வாகச் சீர்திருத்தம் என்ற பெயரில் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கையானது நிர்வாகச் சீர்கேடுகளுக்கும், அதிகாரக் குவியலுக்கும் மட்டுமே வழிவகுக்கும். 
இந்த நடவடிக்கையால் கிராமப்புறங்களில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் கல்வி உரிமைகள் பறிபோகும். எனவே, தொடக்கப் பள்ளியை மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் முடிவினை அரசு கைவிட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. 
 

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post