ஜனவரி 22ம் தேதி முதல் நடைபெற உள்ள காலவரையற்ற போராட்டம் நடத்துவது தொடர்பான அவசர ஆலோசனை கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற உள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பல ஆண்டுகளாக ஜாடோ ஜியோ கூட்டமைப்பை சேர்ந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக ஜன.22ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று (ஜனவரி 18ம் தேதி) இடைநிலை ஆசிரியர்கள் அங்கன்வாடி பணியாணையை பெற மறுத்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம், ஜன.22ம் தேதி நடைபெற உள்ள போராட்டம் தொடர்பாக ஜாக்டோ ஜியோ நிர்வாகி, தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயலாளர் இரா.தாஸ் கூறியதாவது:
இடைநிலை ஆசிரியர்கள் அங்கன்வாடிகளில் சென்று பணியாற்ற சொல்வது தேவையற்றது. ஒரு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றால், அதற்கான நிதி ஒதுக்கீடு செய்து, அலுவலக பணிகளுக்கு இடம் ஒதுக்க வேண்டும். ஆனால் எந்த வித நிதி ஒதுக்கீடும் இல்லாமல், ஏற்கனவே உள்ள இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி மையங்களுக்கு மாற்றுவது தவறு, அது பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை தகுதி குறைப்பு செய்வதற்கு ஒப்பானது.
அங்கன்வாடி மையங்களுக்கு, பிரி பிரைமரி டிரைனிங் முடித்தவர்களை தான் பணியில் நியமிக்க வேண்டும். பல்வேறு மாவட்டங்களில் இடைநிலை ஆசிரியர் இடங்கள் காலியாக உள்ளன.
மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் இடங்களுக்கு குறிப்பிட்ட ஆசிரியர்களை பணியிடமாற்றம் செய்யலாம். இடைநிலை ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளதே தவிர, எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. உரிமைக்காக போராட்டம் நடத்தும் ஆசிரியர்கள் மீது தமிழக அரசு களங்கம் கற்பிக்க முயல்கிறது.
அதேபோல் குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ள பள்ளிகளை மூட, அரசு முடிவு செய்துள்ளது. அதற்கு மத்திய அரசை காரணம் காட்டுகிறது. தனியார் பள்ளிகளுக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
கிராமப்புறங்களில் இடைநிற்றல் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கல்வி என்பது வருங்கால சமுதாயத்தை உருவாக்குவதற்கான மூலதனம். ஆனால் இந்த அரசு கல்விக்கு நிதி ஒதுக்க தயங்குகிறது.
ஜன.22ம் தேதி நடைபெற உள்ள காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடர்பான, ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் பங்கேற்கும் அவசர ஆலோசனை கூட்டம் திருச்சியில் இன்று நடக்க உள்ளது. கூட்டத்துக்குபின் போராட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு தாஸ் கூறினார்.
Post a Comment